ARTICLE AD BOX
சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றிலேயே அதிவேக சதத்தை விளாசி இங்கிலாந்து அணியை துவம்சம் செய்தார் ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஸ் இங்கிலிஷ். 77 பந்துகளில் சதம் அடித்து மிரட்டியுள்ளார். சுமார் 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் 77 பந்துகளில் சதம் அடித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2025 சாம்பியன்ஸ் டிராபி குரூப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் ஜோஸ் இங்கிலிஷ் அதிரடியாக சதம் விளாசினார். அவரது சதத்தின் காரணமாக ஆஸ்திரேலிய அணி இந்தப் போட்டியில் எளிதாக வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 351 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதலில் டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது.

27 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணி தவித்து வந்த நிலையில் மார்னஸ் லாபுஷேன் மற்றும் மேத்யூ ஷார்ட் இணைந்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர். மேத்யூ ஷார்ட் 63 ரன்கள் எடுத்தும், மார்னஸ் லாபுஷேன் 47 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். ஐந்தாம் வரிசையில் இறங்கிய ஜோஸ் இங்கிலிஷ் மற்றும் ஆறாம் வரிசையில் இறங்கிய அலெக்ஸ் கேரி பொறுப்பாக விளையாடி இந்த போட்டியின் முடிவை மாற்றினர். அலெக்ஸ் கேரி 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜோஸ் இங்கிலிஷ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று அசத்தினார். அவர் 77 பந்துகளில் சதம் அடித்த நிலையில் 86 பந்துகளில் 120 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் 352 ரன்கள் என்ற இலக்கை வெற்றிகரமாக எட்டியது.
இந்தப் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் ஜோஸ் இங்கிலிஷ் மற்றுமொரு சாதனையையும் செய்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்காக மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் சதம் அடித்த நான்காவது வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். டி20, ஒருநாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் என மூன்று வெவ்வேறு விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இதுவரை ஜோஸ் இங்கிலீஷ் உடன் சேர்த்து நான்கு ஆஸ்திரேலிய வீரர்கள் மட்டுமே சதம் அடித்துள்ளனர். முன்னதாக ஷேன் வாட்சன் மற்றும் டேவிட் வார்னர் இந்த சாதனையை செய்திருந்தனர்.