ARTICLE AD BOX
இந்தியாவின் பிண்ணாக்கு ஏற்றுமதி நடப்பு நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் 9 சதவீதம் சரிந்துள்ளது.
மதிப்பீட்டு காலகட்டத்தில் ராப்சீட் பிணணாக்கு, ஆமணக்கு விதை பிண்ணாக்கு ஆகியவற்றின் ஏற்றுமதி கணிசமாகக் குறைந்ததால் ஒட்டுமொத்த ஏற்றுமதி சரிவைக் கண்டுள்ளது.
இது குறித்து எண்ணெய் உற்பத்தியாளா்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நாட்டின் பிண்ணாக்கு ஏற்றுமதி கடந்த 2024 ஏப்ரல் முதல் 2025 ஜனவரி வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் 36,03,030 டன்னாக உள்ளது. முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது 9 சதவீதம் குறைவாகும். அப்போது இந்தியா 39,74,351 டன் பிண்ணாக்கு ஏற்றுமதி செய்திருந்தது.
கடந்த ஏப்ரல்-ஜனவரி காலகட்டத்தில் சோயாபீன் பிண்ணாக்கு ஏற்றுமதி 17.71 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இது 15.86 லட்சம் டன்னாக இருந்தது.
இருந்தாலும், மதிப்பீட்டு மாதங்களில் ராப்சீட் பிண்ணாக்கு ஏற்றுமதி 18,95,454 டன்னில் இருந்து 15,42,032 டன்னாகவும், ஆமணக்கு விதை பிண்ணாக்கு ஏற்றுமதி 3,27,261 டன்னில் இருந்து 2,58,005 டன்னாகவும் சரிந்துள்ளது.
முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டு முழுமைக்கும் இந்தியாவின் பிண்ணாக்கு ஏற்றுமதி 48,85,437 டன்னாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் பிண்ணாக்கு வகைகள் வங்கதேசம், தென் கொரியா, வியத்நாம் ஆகிய நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.