ARTICLE AD BOX
7 முதல் 27% வரை ஆதாயம் உறுதி.. உங்கிட்ட இருக்கா?.. பி/இ விகிதம் குறைவாக உள்ள 5 நிறுவன பங்குகள்
பொதுவாக பங்குச் சந்தையில் பி/இ விகிதம் குறைவாக உள்ள பங்குகளில் முதலீடு செய்தால நல்ல ஆதாயம் கிடைக்கும். இதனால்தான் பெரும்பாலான முதலீட்டாளர்கள் பி/இ விகிதம் குறைவாக உள்ள பங்குகளை தேடி பிடித்து முதலீடு செய்வார்கள். நிறுவன பங்கின் சந்தை விலைக்கும், ஒரு பங்கு வருமானத்துக்கும் உள்ள விகிதம் பி/இ விகிதம் எனப்படும். பி/இ விகிதம் = தற்போதைய பங்கின் விலை/ ஒரு பங்கு வருமானம். பொதுவாக பி/இ விகிதம் 25க்குக் கீழ் இருப்பது லாபகரமாகும்.
அந்த வகையில், பி/இ விகிதம் நேர்மறையாக மற்றும் ரூ.5,000 கோடிக்கும் அதிகமான சந்தை மதிப்பு கொண்ட நிறுவனங்களில், மிகவும் மதிப்பு குறைந்த 5 நிறுவன பங்குகளை நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இந்த பங்குகள் 7 முதல் 27 சதவீதம் வரை நல்ல ஆதாயம் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அசோகா பில்ட்கான்
அசோகா பில்ட்கான் நிறுவனம் இபிசி மற்றும் பிஓடி அடிப்படையில் கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை செய்து வருகிறது. மேலும் இந்நிறுவனம் ரெடி மிக்ஸ் கான்கிரிட் விற்பனையிலும் ஈடுபட்டுள்ளது. அசோகா பில்ட்கான் பங்கு விலை தற்போது 3.9 மடங்கு குறைந்த பி/இ விகிதத்தில் வர்த்தகம் ஆகி வருகிறது. இது 5 ஆண்டு பி/இ விகிதமான 10.3 மடங்குடன் ஒப்பிட்டால் மிகவும் குறைவாகும். ஐடிபிஐ கேபிட்டல் நிறுவனம் அசோகா பில்ட்கான் பங்கின் இலக்கு விலையை ரூ.260ஆக நிர்ணயம் செய்துள்ளது. அதாவது இப்பங்கின் விலை 14 சதவீதம் உயர வாய்ப்புள்ளதை இதை குறிப்பிடுகிறது.
கிரேட் ஈஸ்டர்ன் ஷிப்பிங் கம்பெனி
இந்திய கப்பல் மற்றும் ஆயில் டிரில்லிங் சேவைகள் துறையில் முன்னணி நிறுவனமாக வலம் வருகிறது கிரேட் ஈஸ்டர்ன் ஷிப்பிங் கம்பெனி (ஜிஇ ஷிப்பிங்). இந்நிறுவன பங்கு விலை தற்போது 5.9 மடங்கு குறைந்த பி/இ விகிதத்தில் வர்த்தகம் ஆகி வருகிறது. இது 5 ஆண்டு சராசரி பி/இ விகிதமான 6.9 மடங்கை காட்டிலும் சற்று குறைவாகும். கிரேட் ஈஸ்டர்ன் ஷிப்பிங் கம்பெனி பங்கு குறித்த ஆய்வாளர்களின் உணர்வு நேர்மறையாகவே உள்ளது.
கேஎன்ஆர் கன்ஸ்ட்ரக்சன்
1995ல் தொடங்கப்பட்ட ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கேஎன்ஆர் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனம் உள்கட்டமைப்பு திட்ட மேம்பாட்டு நிறுவனமாகும். இந்நிறுவனம் சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் போன்ற பிரிவுகளில் இபிசி சேவைகளை வழங்கி வருகிறது.இந்நிறுவன பங்கு விலை தற்போது 5.5 மடங்கு குறைந்த பி/இ விகிதத்தில் வர்த்தகம் ஆகி வருகிறது. இது 5 ஆண்டு சராசரி பி/இ விகிதமான 17.3 மடங்கை காட்டிலும் சற்று குறைவாகும். ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ், கேஎன்ஆர் கன்ஸ்ட்ரக்சன் பங்கின் இலக்கு விலையை ரூ.255ஆக நிர்ணயம் செய்துள்ளது. இது தற்போதைய விலையிலிருந்து 7.1 சதவீதம் உயரும் என்பதை குறிக்கிறது.
பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன்
பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் ரிசர்வ் வங்கியில் உள்கட்டமைப்பு நிதி நிறுவனமாக பதிவு செய்யப்பட்ட, டெபாசிட் அல்லாத வங்கி அல்லாத நிதி சேவை நிறுவனமாகும். இந்நிறுவனம் இந்திய மின் துறைக்கு நிதி உதவி (கடன்) வழங்குவதில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவன பங்கின் விலை தற்போது 5.8 மடங்கு குறைந்த பி/இ விகிதத்தில் வர்த்தகம் ஆகி வருகிறது. இது 5 ஆண்டு சராசரி பி/இ விகிதமான 3.1மடங்கை காட்டிலும் சற்று அதிகமாகும். மோதிலால் ஓஸ்வால் நிறுவனம் பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் தொடர்பான, வாங்கலாம் என்ற தனது மதிப்பீட்டை தொடருகிறது. இப்பங்கின் இலக்கு விலையை ரூ.475ஆக நிர்ணயம் செய்துள்ளது.இது இப்பங்கின் விலை 21.3 சதவீதம் அதிகரிக்கும் என்பதை வெளிப்படுத்துகிறது.
எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ்
எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் தேசிய வீட்டுவசதி வங்கியில் பதிவு செய்யப்பட்ட ஒரு வீட்டுவசதி நிதி நிறுவனமாகும். இந்நிறுவனம் தனிநபர்களுக்கு குடியிருப்பு,பிளாட்கள் மற்றும் வீடு கட்ட கடன் வழங்குகிறது மேலும் சொத்துக்களுக்கு எதிராக கடன் வழங்குதல் போன்ற சேவைகளையும் இந்நிறுவனம் வழங்குகிறது. தற்போது இந்நிறுவன பங்கின் விலை 5.8 மடங்க பி/இ விகிதத்தில் வர்த்தகமாகி வருகிறது. இது 5ஆண்டு சராசரி பி/இ விகிதமான 7.3 விகிதத்தை காட்டிலும் குறைவாகும். மோதிலால் ஓஸ்வால் நிறுவனம், எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் தொடர்பான, வாங்கலாம் என்ற தனது மதிப்பீட்டை தொடருகிறது. இப்பங்கின் இலக்கு விலையை ரூ.690ஆக நிர்ணயம் செய்துள்ளது. இது வரும் மாதங்களில் இப்பங்கின் விலை 26.5 சதவீதம் ஆதாயம் அளிக்கும் என்பதை சொல்லுகிறது.
Story written by: Subramanian