ARTICLE AD BOX
5 ஆண்டுகளில் 608 சதவீதம் ஆதாயம் .. ஒரே ஒரு செய்தியால் எகிறிய ஹை டெக் பைப்ஸ் பங்கு விலை..
ஹை டெக் பைப்ஸ் நிறுவனம் நாட்டின் முன்னணி பைப் தயாரிப்பு நிறுவனமாகும். ஸ்மால்கேப் பிரிவை சேர்ந்த இந்நிறுவனம் ஸ்டீல் பைப்ஸ்,ஜிஐ பைப்ஸ் மற்றும் ஜிபி பைப்ஸ் போன்ற பல வகையான பைப்புகள் மற்றும் ரூபிங் ஷீட்டுகள் உள்ளிட்டவைகளை தயாரித்து வருகிறது. இந்நிறுவனம் தொடர்ந்து லாபம் ஈட்டி வருவது மற்றும் இந்நிறுவன பங்கு மல்டிபேக்கர் ஆதாயத்தை வழங்கி வருவது போன்ற காரணங்களால் முதலீட்டாளர்கள் மத்தியில் இந்நிறுவன பங்குக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஹை டெக் பைப்ஸ் நிறுவனம் அண்மையில் தனது கடந்த டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டது.
நிபுணர்கள் எதிர்பார்த்ததை காட்டிலும் அந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகள் சிறப்பாக இருந்தது. 2024 டிசம்பர் காலாண்டில் ஹை டெக் பைப்ஸ் நிறுவனம் நிகர லாபமாக ரூ.19.15 கோடி ஈட்டியுள்ளது. இது 2023 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 34 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.14.33 கோடி மட்டுமே ஈட்டியிருந்தது.2024 டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.761 கோடியாக உயர்ந்துள்ளது. இது 2023 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 21 சதவீதம் அதிகமாகும்.

நீண்ட கால அடிப்படையில் ஹை டெக் பைப்ஸ் நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்க நல்ல ஆதாயத்தை கொடுத்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 608 சதவீதம் மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்துள்ளது. அதேசமயம் குறுகிய கால அடிப்படையில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களின் பணத்தை கரைத்துள்ளது. கடந்த 3 மாதத்தில் இந்நிறுவன பங்கின் விலை 33 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 28 சதவீதம் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹை டெக் பைப்ஸ் பணியாளர் நல அறக்கட்டளையின் அறங்காவலரான மனோஜ் குமார் குப்தா ஓப்பன் மார்க்கெட் வாயிலாக அந்நிறுவனத்தின் 26,000 பங்குகளை வாங்கியுள்ளார். இந்த தகவலை ஹைடெக் பைப்ஸ் நிறுவனம் இன்று பங்குச் சந்தை அமைப்பிடம் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்தது. இந்த தகவல் வெளியானதையடுத்து, மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இந்நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் சுமார் 3 சதவீதம் உயர்ந்து ரூ.114வரை சென்றது.
2024 செப்டம்பர் 23ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இந்நிறுவன பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.210.75ஐ எட்டியது. அதன் பிறகு இப்பங்கு தொடர்ந்து சரிவு கண்டு வருகிறது. நேற்று பங்குச் சந்தையில் வர்ததகத்தின் முடிவில் இந்நிறுவன பங்கின் விலை ரூ.110.50ஆக இருந்தது. தற்போது இப்பங்கு அதன் உச்ச விலையை காட்டிலும் 45 சதவீதம் குறைவாக உள்ளது.