ARTICLE AD BOX
2025-26 பட்ஜெட் ரெடி.. இன்று அல்வா விழா நடக்கபோகுது..!!
2025-ஆம் ஆண்டின் மத்திய பட்ஜெட் தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பாரம்பரியமான அல்வா விழா வரும் வெள்ளிக்கிழமை அதாவது ஜனவரி 24-ஆம் தேதி அன்று மாலை மத்திய செயலகத்தின் வடக்கு தொகுதியில் நடைபெறவுள்ளது. வழக்கம் போல நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த விழாவை தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி மற்றும் செயலாளர்கள், பட்ஜெட் தயாரிப்பு செயல்பாட்டில் ஈடுபட்ட அதிகாரிகள், ஊழியர்கள் பங்கு பெறுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தயாரிப்பின் "லாக்-இன்" செயல்முறை தொடங்கும் முன் ஹல்வா விழா நடத்தப்படுகிறது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் அல்வா கிண்டி வழங்குவார். பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கடின உழைப்பை அங்கீகரிக்கும் விதமாக இந்த பாரம்பரிய விழா கொண்டாடப்படுகிறது. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் பட்ஜெட்டுக்கு முன்னதாக அனைத்து பட்ஜெட் ஆவணங்களையும் அச்சிடும் செயல்முறையும் அல்வா விழாவை அடுத்து தொடங்கும்.
நிதி அமைச்சகத்தின் லாக்டவுன் தொடக்கத்தை குறிக்கும் விதமாக இந்த அல்வா விழா நடத்தப்படுகிறது. இதன் பின்னர் எந்த ஒரு அதிகாரியும் அமைச்சகத்தின் வளாகத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவதில்லை.
பட்ஜெட் குழுவில் உள்ள அனைவரும் நாடாளுமன்றத்தில் நிதி ஆவணம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே வெளியேற அனுமதிக்கப்படுகிறார்கள்.1980-ஆம் ஆண்டு முதல் மத்திய பட்ஜெட்டின் அறிக்கைகளை நார்த் பிளாக்கில் அச்சிடுவது ஒரு நிரந்தர வழக்கமாக இருந்து வருகிறது.
இந்த ஆண்டு பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும்?: 2025-ஆம் ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4-ஆம் தேதி முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு பட்ஜெட் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. கூட்டத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையாற்றுவார். பிப்ரவரி 14-ஆம் தேதி முதல் நாடாளுமன்றத்தில் இடைக்கால விடுமுறை இருக்கும் அதன் பிறகு மார்ச் 10ஆம் தேதி இரு அவைகளும் மீண்டும் கூடும்.
முந்தைய ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டுகளைப் போலவே 2025 ஆம் ஆண்டு பட்ஜெட்டும் காகிதம் இல்லா வடிவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. வரவிருக்கும் பட்ஜெட் 2025, நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் ஏழாவது மத்திய பட்ஜெட்டாக இருக்கும். அதிக வருடாந்திர பட்ஜெட்டுகளை தாக்கல் செய்த சாதனையை இவர் படைத்துள்ளார். இதற்கு முன்னர் பிரதமர் மொரார்ஜி தேசாய் 1959 ஆம் ஆண்டு முதல் 1964-ஆம் ஆண்டு வரையில் 5 வருடம் பட்ஜெட்களையும், ஒரு இடைக்கால பட்ஜெட்டையும் தாக்கல் செய்தார்.