ARTICLE AD BOX
துபாய்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர இளம் வீரர் சுப்மன் கில் MRF பேட் உடன் களமிறங்கியது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் CEAT பேட் ஸ்டிக்கர் உடன் களமிறங்கிய சுப்மன் கில், 48 மணி நேரத்தில் MRF ஸ்டிக்கர் ஒட்டி வந்தது எப்படி என்றும் ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட்டின் பிரின்ஸ் என்று ரசிகர்கள் சுப்மன் கில்லை கொண்டாடி வருகின்றனர். ஏற்கனவே இந்திய அணியின் துணைக் கேப்டன் பொறுப்பு சுப்மன் கில்லுக்கு அளிக்கப்பட்டுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சுப்மன் கில் துணைக் கேப்டனாக நியமனம் செய்யப்பட்ட போது சில விமர்சனங்கள் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

ஆனால் முதல் ஆட்டத்திலேயே சதம் விளாசிய சுப்மன் கில், 2வது ஆட்டத்தில் 46 ரன்கள் எடுத்து அசத்தினார். இதனைத் தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். இந்த 3 போட்டிகளிலும் சுப்மன் கில் தனது ஆஸ்தான CEAT ஸ்டிக்கர் ஒட்டிய பேட் உடன்தான் விளையாடினார்.
சுப்மன் கில் யு19 கிரிக்கெட் ஆடிய போது CEAT நிறுவனம் ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டிக்கு பின் 48 மணி நேரத்தில் தொடங்கியுள்ள ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சுப்மன் கில் MRF ஸ்டிக்கர் ஒட்டிய பேட் உடன் களமிறங்கியுள்ளார். இதனால் 48 மணி நேரத்தில் சுப்மன் கில் பேட் ஒப்பந்தம் மாறி இருப்பது தெரிய வந்துள்ளது.
இதன் மூலமாக MRF பேட்டை பயன்படுத்திய 4வது இந்திய வீரர் என்ற பெருமையை சுப்மன் கில் பெற்றுள்ளார். இவருக்கு முன்பாக சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி மற்றும் ஷிகர் தவான் ஆகிய மூவரும் MRF பேட் பயன்படுத்தி வந்தனர். அதேபோல் சர்வதேச கிரிக்கெட்டில் ஸ்டீவ் வாஹ், பிரையன் லாரா, டி வில்லியர்ஸ் ஆகியோரும் MRF நிறுவனத்தால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர்.
ஏற்கனவே விளம்பரத் துறையில் சுப்மன் கில்லின் மதிப்பு ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. நைக்கி, மெர்சிடஸ், டியோர், கோகோ கோலா, ஆப்பிள் நிறுவனத்தின் பீட்ஸ், டாட்டா கேபிட்டல், பஜாஜ் அலையன்ஸ், மை 11 சர்க்கிள், கேசியோ உள்ளிட்ட நிறுவனங்கள் சுப்மன் கில்லை தங்களின் விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்துள்ளனர். தற்போது இந்த பட்டியலில் MRF நிறுவனமும் இணைந்துள்ளது.