ARTICLE AD BOX
தனது சிறுவயதிலேயே தந்தையும், தாயும் பிரிந்து சென்றதால் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால், திருமணம் மற்றும் குழந்தை பெறுவதை ரியோ ராஜ் வெறுக்கிறார். ஆனால், அவரது காதலி கோபிகா ரமேஷ் திருமணம் செய்து குழந்தை பெற ஆசைப்படுகிறார். இதனால், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிகின்றனர். இந்நிலையில், கோபிகா ரமேஷ் கர்ப்பமாக இருப்பதை அறிந்த ரியோ ராஜ், கருவை கலைக்கும்படி சொல்கிறார். தனது விருப்பத்தை மறைத்த கோபிகா ரமேஷ், ரியோ ராஜ் சொன்னதற்காக சம்மதிக்கிறார். இந்த விவகாரம் கோபிகா ரமேஷின் குடும்பத்துக்கு தெரிந்து மிகப்பெரிய பிரச்னைகள் ஏற்படுகிறது.
இறுதியில் என்ன நடந் தது என்பது மீதி கதை. கோபிகா ரமேஷை காதலிக்கும்போது ரியோ ராஜின் நடிப்பில் காணப்படும் உற்சாகம், பிரிவுக்கு பிறகு குறைந்துவிடுகிறது. எனினும் ரியோ ராஜ் இயல்பாக நடித்து ஸ்கோர் செய்துள்ளார். காதலனின் விருப்பத்துக்கு மாறாக செயல்படுவது, பிறகு காதலனுக்காக மாறுவது என்று, இருவேறு மனநிலையை கோபிகா ரமேஷ் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். அருணாசலேஸ்வரன், பவுசி உள்பட அனைவரும் யதார்த்தமாக நடித்துள்ளனர். காதல் கதைக்கு ஏற்ப பாலாஜி சுப்பிரமணியம் இயல்பாக ஒளிப்பதிவு செய்துள்ளார். யுவன் சங்கர் ராஜா தயாரித்து இசை அமைத்துள்ளார்.
அவர் பாடியுள்ள பாடல்கள் உள்பட அனைத்தும் கேட்கும் ரகம். அவரது பின்னணி இசை படத்துக்கு பலம் சேர்த்துள்ளது. நான்-லீனியர் முறையில் படத்தை தொகுத்த தமிழரசன் மற்றும் ஆர்ட் டைரக்டர் சிவசங்கரின் பணி பாராட்டுக்குரியது. ஸ்வினீத் எஸ்.சுகுமார் எழுதி இயக்கியுள்ளார். இளசுகளின் காதல் மூலம் குடும்ப உறவுகளின் மகத்துவத்தை சொல்ல முயற்சித்துள்ளார். கருக்கலைப்புக்கு எதிரான கதை மட்டுமே கவனத்தை ஈர்க்கிறது.