வேளாண் பட்ஜெட்- வாக்குறுதி என்ன ஆச்சு?- விவசாயிகள் சங்கங்கள் அதிருப்தி!

3 hours ago
ARTICLE AD BOX

தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள் ஏராளம்; எல்லாவற்றிற்கும் நில வரம்பு நிர்ணயிப்பு என்பது விவசாயிகளுக்கு முழுமையாக பயனளிக்காது; அறிவிக்கப்பட்டு 25 சதம் பேருக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை என்று சி.பி.ஐ. கட்சியைச் சார்ந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது. 

அச்சங்கத்தின் தலைவர் எஸ்.குணசேகரன் முன் எம். எல்.ஏ. பொதுச் செயலாளர் பி.எஸ். மாசிலாமணி வெளியிட்ட அறிக்கை:

” தமிழ்நாட்டில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வரும் சூழலில் இதன் மேம்பாட்டிற்கான திட்ட ஒதுக்கீடு இல்லை.

மானாவாரி, சிறுதானிய சாகுபடியின் அவசியத்தை அமைச்சர் குறிப்பிட்டு இருந்தாலும் இதை பாதுகாக்கும் அளவில் திட்டங்கள், நிதி ஒதுக்கீடு இல்லை.

நெல் குவின்டால் ரூபாய் 2500, கரும்பு டன் 4000 என்ற தேர்தல் கால வாக்குறுதி மறந்தது போலும், தற்போது நெல் குவிண்டால் ரூபாய் 3000, கரும்பு டன் 4500 விவசாயிகள் வலியுறுத்தி வரும் நிலையில் கரும்புக்கு மட்டும் ஊக்கத்தொகை ரூபாய் 349 சேர்த்து 3500 (டன்) அறிவிக்கப்பட்டுள்ளது இது நம்பிக்கை துரோகம் ஆகும்.

தொடர் இயற்கை பேரிடரில் சிக்கித் தவிக்கும் விவசாயிகள் எதிர்பார்த்திருந்த வேளாண் பயிர் கடன் தள்ளுபடி அறிவிப்பு இல்லாதது ஏமாற்றமே.

வனவிலங்குகளிடமிருந்து வேளாண்மையை பாதுகாப்பதற்கான அறிவிப்புகள் இல்லாதது சரி இல்லை.

சத்தீஸ்கர் மாநிலம் கடந்தாண்டு பட்ஜெட்டில் 16.7 சதம் நிதி ஒதுக்கீடு செய்திருந்தது, தெலுங்கானா மாநிலம் 11.7 சதம் ஒதுக்கீடு செய்திருந்தது, தமிழ்நாடு அரசு கடந்தாண்டு 6.17 சதம் ஒதுக்கீடு செய்தது. இந்தத் தொகையை இரட்டிப்பாகிட நாங்கள் வலியுறுத்தி இருந்தோம். ஆனால் ஒரு சதம் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது.

காவிரி வேளாண் பாதுகாப்பு மண்டலத்தில் வேளாண் தொழில் திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை.

மரபணு மாற்று விதைகள் பாதிப்பு ....

செறிவூட்டப்பட்ட அரிசி பற்றி ....

விளைநிலங்கள் கையகப்படுத்துவது...

சுற்றுச்சூழல் பாதிப்பு....

தரிசு நில மேம்பாட்டிற்காக திட்டங்கள் எதிர்பார்த்த நிலையில் முழுமையாக இல்லை. எனவே அறிக்கை நிறைவு செய்யும் பொழுது இவைகளை கணக்கில் கொள்ள வேண்டும்.” என்று சி.பி.ஐ. சார்ந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கூறியுள்ளது. 

வேளாண் நிதி நிலை அறிக்கையில் பல்வேறு திட்டங்கள், அறிவிப்புகளை வரவேற்கிறோம் எனக் கூறியுள்ள சிபிஎம் கட்சிசார்ந்த விவசாயிகள் சங்கம், நெல், கரும்பு உள்ளிட்ட விளைபொருட்களுக்கு உரிய விலை அறிவிக்காதது ஏமாற்றமளிக்கிறது என சி.பி.எம்.சார்ந்த விவசாயிகள் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது. 


” 
ஒட்டு மொத்தமாக இந்த பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்களுக்காக 45,661 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. புதிதாக 1000 இடங்களில் முதல்வர் உழவர் நல சேவை மையம் அமைக்கப்படுவது, டெல்டா மாவட்டங்களுக்கு வழங்கப்படுவதைப் போல் பிற மாவட்டங்களிலும் நெல் உற்பத்தியை பெருக்குவதற்காக சிறப்பு தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு விவசாயிகளுக்கு இயந்திரங்கள் வாங்குவதற்கு வழங்கப்பட்டு வந்த மானியம் 50 சதத்திலிருந்து 60 சதமாக உயர்த்தப்பட்டுள்ளது. தோட்டக்கலைக் பயிர்கள், இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்துதல், தரமான விதை உற்பத்தியை மேம்படுத்துவதற்கான 7 இடங்களில் அரசு விதை சுத்திகரிப்பு நிலையங்கள், 100 வேளாண் விளை பொருட்கள் மதிப்பு கூட்டு மையங்கள் என பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. மானாவாரியில் உழவு மானியமாக 3 லட்சம் ஏக்கருக்கு தலா 2000 ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது போன்ற பல்வேறு அறிவிப்புகளை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வரவேற்கிறோம்.

அதே நேரத்தில் விவசாயிகளின் அடிப்படையான பிரச்சனையாக உள்ள வேளாண் உற்பத்தி பொருட்களுக்கான கட்டுப்படியான விலை கொடுப்பதற்கான அறிவிப்புகள் எதுவும் இல்லாமல் உள்ளது ஏமாற்றமளிக்கிறது. குறிப்பாக நெல் குவிண்டாலுக்கு 2500 ரூபாய் கரும்பிற்கு டன்னிற்கு ரூ.4000 விலையாகக் கொடுக்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த பட்ஜெட்டிலும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. தற்போது மாநில அரசு நெல்லுக்கான ஊக்கத்தொகை சன்னரகத்திற்கு குவிண்டாலுக்கு ரூ.130, பொது ரகத்திற்கு ரூ.105 மட்டுமே விலை அறிவிக்கப்ட்டுள்ளது. ஒன்றிய அரசின் விலையையும் சேர்த்து குவிண்டாலுக்கு ரூ.2,430 மட்டுமே விலை கிடைக்கிறது. கரும்பிற்கு மாநில அரசின் ஊக்கத்தொகை 349 ரூபாய்  சேர்த்தால் கூட டன்னுக்கு ரூ.3,500 ரூபாய்தான் விலை கிடைக்கும்.” என்று சங்கத்தின் பொதுச்செயலாளர் சாமி. நடராஜன் கூறியுள்ளார். 

மேலும்.” பால் உற்பத்தியாளர்களுக்கான விலை குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. மூடப்பட்டுள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைகளைத் திறப்பதற்கான அறிவிப்புகள் இல்லை. பயிர்க் காப்பீட்டுத் திட்டத்திற்கு வெறும் ரூ.841 கோடி மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது போதுமானதல்ல. காப்பி, தேயிலை, ரப்பர், மரவள்ளிக் கிழங்கு உட்பட்ட விளைபொருட்களுக்கான விலை குறித்து எந்த அறிவிப்பும் இல்லாமல் உள்ளது. எனவே, விடுபட்டுள்ளவற்றையும் மானியக் கோரிக்கை விவாதத்தில் சேர்த்து அறிவித்து அனைத்து விவசாயிகளுக்கும் பயன்படும் வகையில் அறிவிப்பை வெளியிட வேண்டும்.” என்றும் சாமி. நடராஜனின் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Read Entire Article