சிறுகதை; தொண்டர் தரிசனம்

6 hours ago
ARTICLE AD BOX

-ஜெயந்தி

 "'தேர்தல்ல தோற்றதுக்கு தோழி காரணமில்லே, தொண்டர்களின் அலட்சியப்போக்கும் சிலரது துரோகமும்தான் காரணம்'னு முன்னே சொன்னாங்க. இப்ப, தொண்டர் தரிசனம்'ன்றாங்க" என்றான் சொக்கையா, ஆத்திரமாக.

"கம்முனு வா" என்றான சூரப்பன். "கைநீட்டி துட்டு வாங்கினல்ல; பொறகு என்ன?"

''பிசாத்து ஆயிரம் ரூபா. நான் வாங்கிட்டு பஸ்ஸேறி வரதுக்கே காரணம், தலைவியை சந்திச்சு நேருக்கு நேர் கேட்டுடணும்ங்கிறதுக்காகத்தான்!"

"அதான் விவரமா சொல்லிட்டாங்களே, பேப்பர்ல பார்க்கலை? 'நான் எந்த ஒரு குடும்பத்துக்காகவும் இல்லை; எந்த தனி மனிதருக்காகவும் இல்லை; கட்சிக்காகவும் தொண்டர்களுக்காகவும்தான் வாழ்ந்துக் கிட்டிருக்கேன்'னு அறிக்கை விட்டிருக்காங்களே!''

"ஆட்சியில இருந்தப்ப, நடந்த அக்கிரமங்களையெல்லாம் பார்த்துக்கிட்டுத்தானே இருந்தாங்க?"

"அதையும் விளக்கியிருக்காங்களே! 'சில தனி நபர்களும் சில நண்பர்களும் சில அமைச்சர்களும் தப்பா நடந்துக்கிட்டிருக்காங்க. ஆனா, அவங்களைப் பற்றிய உண்மைகளை எனக்குத் தெரிவிக்காமல் வேண்டுமென்றே உளவுத்துறை மறைத்துவிட்டது! அப்படீன்னு!'"

"உளவுத்துறையும் ஏமாத்திட்டதாவே வைச்சுப்பம். பத்திரிகைங்க? பத்தி பத்தியா எழுதிட்டுத்தானே இருந்தாங்க?''

'பத்திரிகைகள் ஏதோ ஆத்திரத்துல அவதூறுகளை அடுக்கறதாக தப்பா எடை போட்டுட்டேன்; அதற்காக வருத்தப்பட்றேன்; வேதனைப்படறேன்'னு ஒப்புக்கிட்டாங்களே! எவ்வளவு பெருந்தன்மை!"

"இதென்ன, யாரை ஏமாத்தப் பார்க்குறாங்க? முதல்வருக்கே தெரியாமல், அவருக்கு நெருங்கினவங்களும் அமைச்சர்களும் கூட்டுக் கொள்ளை அடிக்க முடியுமா? முடியும்னா இவங்க என்ன முதல்வர்? அந்தப் பதவியை வகிக்க இவங்களுக்கு என்ன தகுதி?"

"நீ ரொம்ப யோசிக்கிறே. தொண்டனுக்கு இது உதவாது" என்றான் சூரப்பன்.

"அப்ப இவங்க பணம் பண்ணவேயில்லியாமா? கேட்காம விடப் போறதில்லே!"

"வீண் வம்புல நீ மாட்டிக்காம இருக்கப் போறதில்லை!"

"என் நகத்தின சதை போன்றவர்களே! என் உடலின் உயிர் போன்றவர்களே..."

தொண்டர் தரிசனம் தொடங்கியது.

"இன்று நாம் துரோகிகளையெல்லாம் வெளியேற்றி கட்சியைத் தூய்மைப்படுத்திக்கொண்டிருக்கிறோம். நடந்தன கனவாக மறையட்டும்; இனி நடப்பன நல்லனவாக இருக்கட்டும்!"

சொக்கையாவுக்கு ஆவேசமாக வந்தது.  "ஒரு சந்தேகம்!" என்று குரல் கொடுத்தான்.

'என்ன?' என்பதுபோல் தலைவி ஆச்சர்யமாகத் திரும்பினார் அந்தப் பக்கமாக.

இதையும் படியுங்கள்:
பாகிஸ்தானிய பத்திரிகையாளரின் வியப்பு! கும்பமேளா மனித குலத்தின் மிகப்பெரிய கூட்டம்!
Short Story in tamil

அதற்குள் தொண்டர்களிடையே தொண்டராகப் புகுந்திருந்த அடியாட்களுள் ஒருவன் சொக்கையாவை நெருங்க, அவன் முதுகில் கூர்மையாக ஏதோ உறுத்தியது. இலேசாக ஒரு எரிச்சல் கண்டது. "பேட்டா கீசுடுவேன், கீசு! தலைவி பேச்சிலே உனக்கு சந்தேகமாடா! பேமானி!' என்று மிரட்டினான் மாரி.

"இன்றைய ஆட்சியை வீழ்த்தி விட்டு எங்கள் தலைவி மீண்டும் பதவிக்கு வருவது, ஐந்து வருஷங்களுக்கு அப்புறமா, அல்லது அதற்கு முன்னதாகவேயா?" என்றான் சொக்கையா.

தலைவி அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள். "ஐந்தாண்டுகளுக்குப் பின் நிச்சயம்; அதற்கு முன்னதாக சாத்தியம்; இன்றே உங்கள் நெஞ்சங்களை நான் ஆள்வது சத்தியம்!"

கரவொலி, விசில் சத்தம், ‘டால்பி ஸ்டீரியோ சவுண்ட் சிஸ்டம்' இன்றியே காதைக் கிழித்தது!

"அந்த ஆளை அழைச்சு வா" என்று உத்தரவு போட்டுவிட்டு, பங்களாவுக்குள் மறைந்தார் தலைவி.

சற்று நேரத்தில் தலைவி முன் நின்றான். "சமயோசிதமா நடந்துக்கிட்டு பிரமாதப்படுத்திட்டே! வாங்கிக்க" என்று சோபா சுந்தரி ஜாடை காட்ட, கனமான கவர் தரப்பட்டது. "பத்தாயிரம் இருக்கு. ஸ்பெஷல் போனஸ்!"

ஏமாற்றமா, சந்தோஷமா என்று புரியாமல் பெற்றுக்கொண்டு திரும்பினான்.

"மாரி மாதிரி ஆளுங்க எங்கிட்ட சாரி சாரியா இருக்காங்க. எல்லார்கிட்டேயும் ஸ்பிரிங் கத்தியும் இருக்கு''. என்று சொல்லி அனுப்பினாள்.

சொக்கையா அமைதி அடைந்தான். 'தன்னைப் போல்தானே மற்றவர்களும்?' என்று எண்ணி எல்லோரையும் மன்னித்து விட்டான்.. ஒருத்தியைத் தவிர!

 பின்குறிப்பு:-

கல்கி 01.09.1996 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Read Entire Article