ARTICLE AD BOX
இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்னை என்பது பல தசாப்தங்களாக நீடித்து வருகிறது. இந்த நிலையில், காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பினர் அக்டோபர், 2023இல் இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன், 252 பேர் பணயக் கைதிகளாகவும் பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. 15 மாதங்களாக போர் நடைபெற்ற நிலையில், தற்போது நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு, இரு நாடுகளும் பிணைக்கைதிகளை பரிமாறி வருகின்றன. அப்போது 25 பணயக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்தனர். அத்துடன் உயிரிழந்த 8 பணயக் கைதிகளின் உடல்களை ஒப்படைத்தது. இதற்குப் பதிலாக சுமார் 2 ஆயிரம் பாலஸ்தீனர்களை சிறையில் இருந்து இஸ்ரேல் விடுவித்தது. ஏழு வார ஒப்பந்தம் நிறைவு பெற்றதும், 2-வதுகட்ட ஒப்பந்தம் அதனைத் தொடர்ந்து நீடிக்கும் வகையில் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.
ஆனால் ஏழு வாரகால போர் நிறுத்தம் இந்த மாதம் தொடக்கத்தில் நிறைவடைந்த நிலையில், அடுத்தக்கட்ட போர் நிறுத்தத்திற்கான ஒப்பந்தம் ஏற்படவில்லை.
இந்த நிலையில் நேற்று அமெரிக்க-இஸ்ரேல் பணயக் கைதி ஒருவர் விடுவிக்கப்படுவார். உயிரிழந்த 4 பணயக் கைதிகள் உடல் ஒப்படைக்கப்படும் என ஹமாஸ் தெரிவித்திருந்தது. இதற்கிடையே, முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் அமல்படுத்தினால் மட்டுமே பணயக்கைதி விடுவிக்கப்படுவார். 4 பணயக்கைதி உடல்கள் ஒப்படைக்கப்படும் என ஹமாஸ் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஹமாஸ், "போர் நிறுத்தத்தின் இரண்டாம் கட்டம் குறித்து நீண்டகாலமாக தாமதமாகி வரும் பேச்சுவார்த்தை விடுதலை செய்யப்பட்ட நாளிலிருந்து தொடங்கி 50 நாட்களுக்கு மேல் நீடிக்கக்கூடாது. மனிதாபிமான உதவிகள் நுழைவதைத் தடுப்பதை இஸ்ரேல் நிறுத்திவிட்டு, எகிப்துடனான காஸா எல்லை பாதையில் இருந்து விலக வேண்டும். பணயக் கைதிகளுக்கு ஈடாக மேலும் பல பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளது. ஆனால் இதுதொடர்பாக இஸ்ரேல் உடனடியாக கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.