ARTICLE AD BOX
ஒடிசா மாநிலம் டேங்கானாள் மாவட்டத்தில் வேட்டைக்குத் துணை சென்ற நபர், வன விலங்கு என நினைத்து தவறுதலாக துப்பாக்கியால் சுடப்பட்டதில் பலியாகியுள்ளார்.
டேங்கானாளின் ஃபாசி கிராமத்தைச் சேர்ந்த பண்ணை உரிமையாளர் கோபிந்தா நாயக் (வயது 47), இவரும் அவரது உறவினரான ரமேஷ் நாயக் (45) என்பவரும் அங்குள்ள வனப்பகுதியில் அவ்வப்போது வேட்டைக்குச் செல்வார்கள் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று (பிப்.23) தனது பண்ணையில் உறங்கிக்கொண்டிருந்த கோபிந்தாவை அதிகாலை 2.30 மணியளவில் நாட்டுத் துப்பாக்கியுடன் அங்கு வந்த அவரது உறவினரான ரமேஷ் வேட்டைக்குத் துணைக்கு வருமாறு அழைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இருவரும் சேர்ந்து அங்குள்ள வனப்பகுதியில் வேட்டைக்கு சென்றுள்ளனர். காடுகளிலுள்ள புதருகளினுள் ஏதேனும் விலங்குள ஒளிந்திருக்கக் கூடும் என்பதினால் அந்த புதருகளின் கிளைகளை பிடித்து உலுக்குமாறு ரமேஷ் கூறியதினால், கோபிந்தாவும் புதருகளை உலுக்கியவாறு சென்று கொண்டிருந்தார்.
இதையும் படிக்க: கும்பமேளாவில் சிறப்பான ஏற்பாடுகள்: முதல்வருக்கு நன்றி தெரிவித்த அக்ஷய் குமார்!
சில அடி தூரம் கடந்ததும் செடிகள் உரசும் சத்தம் கேட்டதினால் விலங்கு என்று நினைத்து அந்த திசையை நோக்கி ரமேஷ் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுள்ளார். அப்போது, அதில் ஒரு குண்டு எதிர்பாராத விதமாக கோபிந்தாவின் நெஞ்சில் பாய்ந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அங்கு சென்று ரமேஷ் பார்த்தபோது கோபிந்தா ரத்த வெள்ளத்தில் கீழே கிடந்தது தெரிய வந்துள்ளது. உடனடியாக, தங்களது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கோபிந்தாவை மீட்டு அப்பகுதி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர், கோபிந்தாவின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து ரமேஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர்.