ARTICLE AD BOX
வாஷிங்டன்: யுஎஸ்எய்டு வெளிநாட்டு நிதியுதவி ஒப்பந்தங்களில் 90% குறைக்க டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதல் செலவுகளைக் குறைப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். டிரம்ப் நிர்வாகம், வெளிநாடு நிதியுதவிகளை நிறுத்த உத்தரவிட்டது. உலக வல்லரசான அமெரிக்கா உலகின் பல்வேறு நாடுகளிலும் பல திட்டங்களுக்கு நிதியுதவி செய்கிறது. இது சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனத்தின் (யுஎஸ்எய்டு) மூலம் செய்யப்பட்டு வருகிறது.
இதற்காகப் பல மில்லியன் டாலரை ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்கா ஒதுக்குகிறது. கடந்த 2023ம் ஆண்டில் இந்திய மதிப்பில் ரூ.5.17 லட்சம் கோடி(60 பில்லியன் டாலர்) ஒதுக்கியது. டிரம்ப் ஆட்சிக்கு வந்த பின்னர் யுஎஸ்எய்டு நிதியை முடக்கினார். இதனால் ஆப்பிரிக்க நாடுகள் உலகெங்கும் பல பல நாடுகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை தொடர்ந்து யுஎஸ் எய்டு நிறுவனத்தில் பணிபுரியும் 1,600 பேரை வேலையை விட்டு நீக்குவதற்கு எலான் மஸ்க் தலைமையிலான அமெரிக்க அரசின் நிர்வாக திறன் துறை உத்தரவிட்டுள்ளது.
வெளிநாட்டு நிதியுதவி திட்டத்திற்கான நிதியுதவியை நிறுத்தியுள்ள டிரம்ப் நிர்வாகம் இப்போது ஒரு பெரிய நடவடிக்கையாக,யுஎஸ் எய்டு நிறுவனத்தின் வெளிநாட்டு உதவி ஒப்பந்தங்களில் 90% க்கும் அதிகமானவற்றைக் குறைக்க முடிவு செய்துள்ளதாக அமெரிக்க பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.
* மாவட்ட நீதிபதி உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை
அமெரிக்க வெளிநாட்டு உதவிகளை டிரம்ப் நிர்வாகம் நிறுத்தி வைத்ததற்கு எதிராக லாப நோக்கம் அல்லாத அமைப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி அமீர் அலி, வெளிநாட்டு நிதியுதவியை ஒப்பந்ததாரர்களுக்கும்,மானியம் பெறுபவர்களுக்கும் வழங்க நேற்றுமுன்தினம் நள்ளிரவு வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் விசாரிக்க மறுத்து விட்டது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் மாவட்ட நீதிபதியின் உத்தரவை நிறுத்தி வைத்து இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளார்.
The post வெளிநாட்டு நிதியுதவி ஒப்பந்தங்களில் 90% குறைக்க டிரம்ப் முடிவு appeared first on Dinakaran.