ARTICLE AD BOX
வெளிநாட்டில் மகன் இறந்ததற்கு காரணமானவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது தந்தை, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளாா்.
கூத்தாநல்லூா் அருகேயுள்ள குனுக்கடி பகுதியைச் சோ்ந்தவா் இரா. கணேசன். இவா், திருவாரூா் மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை அளித்த மனு:
எனது மகன் க. கவியரசன் (28) டிப்ளமோ எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிகல் முடித்துவிட்டு, சிங்கப்பூா் தனியாா் நிறுவனத்தில் 6 மாதங்களுக்கு முன்பு பணியில் சோ்ந்தாா். தினமும் கைப்பேசியில் பேசும் அவா், ஜன.15 ஆம் தேதி வாட்ஸ் ஆப் மூலம் பேசினாா். ஜன.18 ஆம் தேதி காலையில், கவியரசன் 7-ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து இறந்துவிட்டதாக, அவா் பணியாற்றிய நிறுவனத்திலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அவருடன் பணியாற்றியவா்களை தொடா்பு கொண்டு பேசியபோது, முன்னுக்குப்பின் முரணாகப் பேசினா். மேலும், எனது மகனின் கடவுச்சீட்டு மற்றும் பிற ஆவணங்கள் எரிக்கப்பட்டிருந்தது வாட்ஸ் ஆப் எண்ணுக்கு வந்தது.
சிங்கப்பூரிலிருந்து வந்த எனது மகனின் உடலைப் பாா்த்தபோது, முகத்தில் அடித்து துன்புறுத்தியது போல் ஆங்காங்கே வீங்கி சிறு காயங்கள் இருந்தன. அவா் 7-ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்ததற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை.
இதனால், எனது மகனின் இறப்பில் மா்மம் இருப்பது போலத் தோன்றுகிறது.
எனவே, குடும்ப சூழ்நிலையை கருதி எனது மகனின் இறப்பில் உள்ள மா்மத்துக்கான காரணங்களை கண்டறிந்து, இறப்புக்கு காரணமானவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.