ARTICLE AD BOX
ஒரு தொழிலாளி கரும்புத் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தான். அன்று கடும் மழை பெய்திருந்தது. தரையிலுள்ள சிறிய குழிகளிளெல்லாம் தண்ணீர் நிறைந்து வழிந்தது. இந்தத் தொழிலாளி கரும்பு கட்டுகளை சுமந்து மறு மூலையில் அடுக்கிக் கொண்டிருந்தான். அப்படி ஒரு தடவை கரும்பு கட்டுகளை சுமந்து செல்லும்போது வழுக்கியதில் தடுமாறி ஒரு காலை ஒரு குழிக்குள் வைத்துவிட்டான்.
குழிக்குள் விட்ட காலில் ஏதோ ஒன்று குத்தியது போன்று உணர்வு ஏற்பட்டது. முள் என நினைத்த அவன், உடனே காலை வெளியில் எடுத்துவிட்டான். எந்த ஒரு பாதிப்பும் இல்லை. அதை அவன் பெரிதாகவும் நினைக்கவில்லை. பிறகு வழக்கம்போல் அவனின் வேலைகள் நடைபெற்றது. காலையில் வீடு திரும்பினான். பிறகு இரவில் நன்றாக உறங்கினான். அன்றைய காலைப்பொழுது நன்றாகவே புலர்ந்தது. சுறுசுறுப்பாக எழுந்தான். குறிப்பிட்ட நேரத்தில் வேலைக்கு வந்தான். அன்றைய வேலையைத் தொடங்கினான்.
நேற்று பெய்த மழையில் நிறைந்திருந்த தண்ணீர் எல்லாம் குழிக்குள் வற்றிப்போய் இருந்தன. அந்தத் தொழிலாளியோ அவனின் வேலையில் மும்முரமாக இருந்தான். கரும்புக் கட்டுகளைச் சுமந்து கொண்டு வரும்போது நேற்று அவன் காலைவிட்ட குழியை தற்செயலாகப் பார்த்துவிட்டான்.
அந்தக் குழியில் ஒரு பாம்பு செத்து கிடந்தது. உடனே அவனுக்கு நேற்றைய நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது. நேற்று தன் காலை குழிக்குள்ளிருந்து குத்தியது முள் அல்ல; மாறாக அந்தப் பாம்பின் விஷபல்லுதான் என நம்பினான். பயம் பற்றிக் கொண்டது. உடனே அவனின் உடம்பு செயலிழந்தது. விஷம் ஏறியது; படபடப்பு ஏற்பட்டது; வாயில் நுரை தள்ளியவனாக கீழே சாய்ந்து அடுத்த வினாடியே இறந்து போனான். அவனின் இந்த மரணத்திற்கு யார் காரணம்? பாம்பா? அல்லது பாம்பு கடித்ததால் இறந்துதான் போவோம் என்ற அந்த எண்ணமா?
பாம்புதான் என்றால் நேற்றே இறந்திருக்க வேண்டும். ஆக எண்ணம் தான் காரணமாகும். பாம்பு கடித்தவர்களில் பயத்தால் இறப்பவர்களே அதிகள் என்று. இப்படித்தான் சிலர் சில தீய எண்ணங்களுக்கு அடிமையாகி தங்களையே அழித்துக் கொள்கின்றனர்.
சிலர், தங்களுக்கு பிறரது அனுதாபம் ஏற்பட வேண்டும் என்பதற்காக ஓயாது புலம்பிக் கொண்டிருப்பார்கள். பிறகு அந்த புலம்பலே அவர்களின் வாழ்க்கையை சோகமாக மாற்றிவிடும்.
சில பிச்சையெடுக்கும் நபர்களை பார்க்கலாம். அவர்களின் முகத்தில சோகமே தவழும். பிறரது அனுதாபங்களைப் பெற ஆரம்பத்தில் அச்சோகங்களை செயற்கையாகத்தான் வரவழைப்பார்கள். பிறகு அச்சோகமே அவர்களுக்கு இயற்கையாகவே அமைந்துவிடும்.
சிலரின் எண்ணத்தில்தான் ஒரு திறமையற்றவன். கல்வியறிவில்லாதவன், ஏழை போன்ற எண்ணங்கள் மனதில் மரங்களாக வளர்ந்திருப்பதைக் காணலாம். இதையே அவர்களின் வாயும் ஒலிபெருக்கிக் கொண்டிருக்கும்.
இப்படியான எண்ணம் கொண்டோர் உடனே அவ்வெண்ணத்தை மாற்றி நேர்மறையான எண்ணத்தை விதைக்க வேண்டும். 'நான் திறமையானவன்,' 'நான் ஆரோக்கியமானனவன்' போன்ற எண்ணங்களை ஒவ்வொரு நாளும் நம்பிக்கையுடனும் உணர்ச்சி தளும்பலுடனும் நினைக்கும்போது, உங்களின் பழைய கெட்ட எண்ணங்கள் அழிக்கப்பட்டு புதிய நல்ல எண்ணங்கள் உங்கள் மனதில் கொலு வீற்றிருக்கும்.
அவ்வெண்ணங்கள் உங்களின் வாழ்வில் பிரதிபலிக்க ஆரம்பிக்கும். உடல் சுறுசுறுப்படையும்; ஆரோக்கியம் ஒட்டிக்கொள்ளும், மனவலிமை ஏற்படும். செயல் தீவிரமாகும்; வாழ்வு உயரும்; மகிழ்ச்சி பொங்கும்; வெற்றி என்னும் சங்கநாதம் உங்கள் வாழ்வில் என்றும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.