ARTICLE AD BOX
நீங்கள் பிறருக்கு தரும் பாராட்டு 'பூமராங்' போல சுற்றி திரும்ப உங்களுக்கே வரும் என்பது தெரியுமா உங்களுக்கு? பாராட்டு வார்த்தைகள் வலிமையானவை. அது கொடுப்பவர் மற்றும் பெறுபவர் இருவரிடமும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஒருவரை அவரின் செயலுக்காக பாராட்டும்போது ஏற்படுத்தும் நேர்மறை விளைவுகள் நிறைய...
பாராட்டு ஒருவரின் நாளை பிரகாசமாக்கி அவர்களின் மனநிலையை மேம்படுத்தும். நன்றியுடன் பாராட்டும் சேரும்போது மகிழ்ச்சி மற்றும் திருப்தியான உணர்வுகளை அதிகரிக்கும். மேலும் பாராட்டுதலில் கவனம் செலுத்துவது மனஅழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்க உதவும்.
மேலும் பாராட்டு வார்த்தைகள் உங்கள் அலுவலகம் மற்றும் வீட்டில் பிணைப்புகளை வலுப்படுத்தி உறவுகளை ஆழமாக்கும். ஒருவருக்கொருவர் புரிதலை ஏற்படுத்தும். மற்றவர்களிடம் சுயமரியாதை மற்றும் நம்பகத்தன்மையை பெறஉதவும்.
பாராட்டு வார்த்தைகள் நீங்கள் விரூம்புபவரிடம் நெகிழ்ச்சியையும் விடாமுயற்சியையும் வளர்க்க உதவும். நேர்மறையான மற்றும் ஆதரவான சூழலை உருவாக்க ஊக்க வார்த்தைகள் அவசியமாகிறது.
நீங்கள் ஒருவரை பாராட்டும்போது அவருடைய தன்னம்பிக்கை அதிகரிப்பது போலவே உங்களுடைய தன்னம்பிக்கையும் அதிகரிக்கிறது. வெற்றி பெற்றவர்களை கவனித்து பாருங்கள் கவனித்து பாருங்கள். தாங்களே பெரியவர்கள் என்று அவர்கள் எப்போதும் நினைக்க மாட்டார்கள். தங்களுக்கு எதிரில் யாரேனும் திறமையுடன் இருந்தால் அவர்களை கைகுலுக்கியோ அல்லது அணைத்தோ பாராட்டுவார்கள். இந்த செயலால் பாராட்டப்பட்டவர் மற்றும் பாராட்டியவர் இருவருமே வெற்றியை நோக்கி தள்ளப்படுகிறார்கள்.
பாராட்டுகளை விரும்பாத மனிதர்கள் இங்கு இல்லை. ஆனால் பாராட்ட வேண்டும் என்ற எண்ணம் கொண்ட மனிதர்கள் பலர் இல்லை. மனம்விட்டு பாராட்டிப் பாருங்கள். அப்போதுதான் புரியும் வாழ்தலின் அர்த்தமும் வெற்றியின் ரகசியமும்.
பாராட்டின் மூலம் மனிதர்களின் முக்கியத்துவத்தை, பொருட்களின் மதிப்பை அனைவருக்கும் தெரியவைக்க முடியும். பாராட்டின் மூலம் நமது நன்றி உணர்வை வெளிப்படுத்தலாம். நமது பண்பாடு நடத்தையை காட்டிக்கொள்ளலாம்.
குறிப்பாக பாராட்டுவதன் மூலம் பாராட்டப்படுபவருக்கு அவருடைய முக்கியத்துவத்தை உணர்த்துகிறீர்கள். அவர் உங்களுக்காக எதையும் செய்ய தயாராகிவிடுவார். உரிய நேரத்தில் தரப்படும் பாராட்டு நல்ல விளைவை ஏற்படுத்தும். தாமதமான பாராட்டு செல்லாக்காசாகும்.
முதலில் நம்மைச்சுற்றி இருப்பவர்களை பாராட்ட பழகிடுவோம். நமது குடும்பத்தில் உள்ளவர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் நம்முடன் இந்த சமூகத்தில் இணைந்து பயணிப்பவர்கள் அனைவருமே நமது பாராட்டிற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
உங்களால் பாராட்டப்படுபவர்கள் உங்களுடைய வெற்றிக்கு உறுதுணையாகவே இருப்பார்கள். ஒரு பாராட்டு வாழ்வை மாற்றும் நோக்கத்தை தூண்டும் உற்சாகத்தை வழங்கும் என்று மனவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ஆனால் ஒன்று. பாராட்டு புகழ்ச்சியாக மாறாமல் இருக்கவேண்டும். ஏனெனில் பாராட்டில் உண்மை கொஞ்சம் மிகைப்படுத்தப்படும். புகழ்ச்சியோ முழுக்கவும் பொய்யாகவே இருக்கும். பாராட்டு ஊக்குவிக்கும். புகழ்ச்சி சுயநல நோக்கமுடையதாய் இருக்கும்.
ஆகவே பாசாங்கு இல்லாத நேர்மையான பாராட்டை வழங்கி பாருங்கள். திரும்ப நம் கைகளில் வந்து சேரும் பூமராங் போல திரும்ப நம் வெற்றிகளுக்காக வந்து சேரும்.