ARTICLE AD BOX
நாம் எவ்வளவுதான் பணம் சம்பாதித்தாலும் ஏதோ ஒரு சமயத்தில் கடன் வாங்கவேண்டிய நிலை ஏற்படும். அவ்வாறு பணப்பற்றாக்குறை ஏற்படாமல் வீட்டில் எப்போதும் செல்வம் குறைவில்லாமல் நிறைந்திருக்க இந்த 3 பொருட்கள் கட்டாயம் தீராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அந்தப் பொருட்கள் என்னவென்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
நம்முடைய சாஸ்திரத்தில் மிகவும் சக்தி வாய்ந்த நவகிரகங்களாக சொல்லப்படுபவர்கள் சனி, செவ்வாய் மற்றும் சந்திரன் ஆகியோராவார்கள். சனி பகவான் நாம் செய்யும் அனைத்து செயல்களுக்கும் கர்ம பலனை அளிக்கக்கூடியவர். சந்திர பகவான் நம் சிந்தனைகளையும், எண்ணங்களையும் தெளிவாக வைத்திருப்பார். செவ்வாய் பகவான் நமக்குக் கடன், நோய், செல்வம், நிலம் போன்றவற்றை அருள்பவர்.
செல்வத்தின் அதிதேவதை என்று மகாலக்ஷ்மியை சொல்வோம். அவரின் ஆசி பெற்றிருந்தால் செல்வத்தில் குறைவு ஏற்படாது. என்னதான் பணம் இருந்தாலும், சந்திர பகவானின் அருள் இல்லை என்றால், பணம் தண்ணீராய் செலவு ஆகும். செவ்வாய் பகவானின் அருள் இல்லையென்றால், பணத்தை செலவு செய்துவிட்டு, மேலும் கடன் வாங்கும் நிலை ஏற்படும். சந்திர பகவான், செவ்வாய் பகவான், மகாலக்ஷ்மி ஆகியோரை நம் வீட்டில் இருக்கும் பொருட்களோடு ஒப்பிடுகிறார்கள் பெரியோர்.
1. கல் உப்பு: பாற்கடலை கடையும்போது அதிலிருந்து அமிர்தம் வந்தது. அத்துடன் மகாலக்ஷ்மியும் வந்தார். அந்தக் கடலில் இருந்து கிடைக்கும் பொருள்தான் கல் உப்பு. இந்தக் கல் உப்பு மகாலக்ஷ்மியின் அம்சமாகவே கருதப்படுகிறது. எக்காரணத்தைக் கொண்டும் கல் உப்பு வீட்டில் குறையவே கூடாது. அவ்வாறு கல் உப்பு ஒருவர் வீட்டில் குறைகிறது என்றால், பணச் சுமை, பணத்தட்டுப்பாடு ஏற்படப்போகிறது என்று அர்த்தம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கல் உப்பு வாங்கி வீட்டில் வைப்பதால் செல்வ வளம் பெருகும் என்று சொல்லப்படுகிறது.
2. அரிசி: நம் வீட்டில் பச்சரிசியையோ அல்லது சாப்பாட்டிற்கு பயன்படுத்தும் அரிசியையோ குறைவில்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அரிசி சந்திர பகவானின் அம்சமாகக் கருதப்படுகிறது. அரிசி வீட்டில் தீர்ந்துவிட்டால், உடனேயே வாங்கி அதை நிரப்பி விட வேண்டும். சந்திர பகவானின் அருள் இல்லையென்றால், சரியான முடிவு எடுக்க முடியாது. கடன் பிரச்னை, குழப்பம் வந்து சேரும். நம் வீட்டில் பச்சரிசியோ அல்லது உணவு சமைக்கப் பயன்படுத்தும் அரிசியையோ தீராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
3. துவரம் பருப்பு: துவரம் பருப்பு செவ்வாய் பகவானின் அம்சமாகக் கருதப்படுகிறது. கடன் வாங்குகிறோம் என்றால், செவ்வாய் பகவானின் அருள் இல்லாததே காரணமாகும். நமக்கு செவ்வாய் பவானின் அருள் இருந்தால், வாங்கிய கடனை திருப்பி செலுத்தும் அளவிற்கு பணம் சேரும் என்று சொல்லப்படுகிறது. திருமண சமயங்களிலே இந்த கல் உப்பு, அரிசி, துவரைப் பருப்பை முக்கியமாக சேர்த்துக் கொள்வார்கள். நம்முடைய சாஸ்திரத்தில் இந்த மூன்று பொருட்களையும் மிகவும் முக்கியமாகக் கருதுகிறார்கள். எனவே, உங்கள் வீட்டிலும் இந்த 3 பொருட்களையும் குறைவில்லாமல் வைத்து வளமாக வாழுங்கள்.