ARTICLE AD BOX
விமானங்கள் மீது பறவைகள் மோதுவது நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. கடந்த ஐந்தாண்டில் மட்டும் 2 லட்சத்து 70 ஆயிரம் முறை, விமானங்கள் மீது பறவைகள் மோதியுள்ளதாக, சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.
மணிக்கு 480 கிமீ வேகத்தில் பறக்கும் ஒரு விமானத்தின் மீது 1.8 கிலோ எடையுள்ள ஒரு பறவை மோதினால் அது 14 டன் எடையுள்ள ஒரு பொருள் மணிக்கு 1000கிமீ வேகத்தில் மோதியதற்கு சமம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இதனால்தான் விமானங்கள் மீது பறவைகள் மோதுவது பெரும் விபத்துகளை ஏற்படுகின்றன.
சமீப காலமாக இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடப்பது, விமான பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 2024 டிசம்பரில் தென் கொரியாவில் நடந்த இத்தகைய சம்பவத்தில், பயணிகள் உட்பட 179 பேர் பலியாகினர்.
விமானத்தின் மீது பறவைகள் மோதும் சம்பவங்களில் 65 சதவீத அளவுக்கு சிறிய சேதங்கள் மற்றும் பாதிப்புகளை மட்டுமே இருக்கும். சில வேளைகளில் பெரிய அளவிலான சேதங்களை கூட ஏற்படுத்திவிடும். இது பயணிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும்.
அமெரிக்க விமானப்போக்குவரத்து அமைப்பு , விமானம் மீது பறவைகள் மோதும் நிகழ்வுகளில் 61 சதவீதம், விமானம் தரை இறங்கும்போது நடக்கின்றன. 36 சதவீதம், விமானம் புறப்படும்போது நடக்கின்றன என்கிறது. அமெரிக்காவை பொறுத்தவரை, 54 சதவீதம் பறவை மோதும் சம்பவங்கள், ஜூலை முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் நடக்கின்றன. அப்போதுதான், இளம் பறவைகள் கூட்டில் இருந்து வெளியேறும் காலம் என்பது அதற்கு காரணம்.
சிங்கப்பூர் விமான நிலையத்தில் பறவைகள் மோதியதால் பெரிய அளவிலான சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. எனினும், சிங்கப்பூர் விமான நிலைய சுற்று வட்டாரத்தில் பறக்கும் உருவத்தில் பெரிய பறவைகள், சிங்கப்பூர் துப்பாக்கி சங்கத்தினர் உதவியுடன் வேட்டையாடப் பட்டன. இதற்கு உயிரியல் நிபுணர்கள், விலங்கு ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தற்போது ஓடுபாதைகளில் பறவைகளின் நடமாட்டத்தைக் கண்டறிந்து கண்காணிக்க வீடியோ பகுப்பாய்வு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
அதிக ஒலி எழுப்பி பறவைகளை விரட்டக்கூடிய கருவிகளை பயன்படுத்தி, அவற்றை ஓடுபாதைக்கு வராமல் தடுக்கும் கருவிகள் உபயோகத்தில் உள்ளன. இந்த கருவிகளின் ஒலி, 3 கிலோமீட்டர் வரை கேட்கும். சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில், ஏரோ லேசர் எனப்படும் லேசர் ஒளி கருவியை பயன்படுத்தியும் பறவைகள் விரட்டப்படுகின்றன.
ஆஸ்திரேலியாவின் டார்வின் விமான நிலையத்தில், ஓடுபாதை அருகே இருக்கும் புற்களின் மீது களைக்கொல்லி, பூச்சிக்கொல்லி அடித்து, புழு, பூச்சிகள் இல்லாமல் செய்து விடுகின்றனர். இதன் மூலம் அவற்றை தேடி பறவைகள் வருவது தடுக்கப்படுகிறது.
ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில், மழை பெய்தால், சற்று நேரத்திலேயே மொத்த தண்ணீரும் வடிந்துவிடும் வகையில் சிறப்பு வடிகால் வசதி இருக்கிறது. அதன் மூலம் தண்ணீருக்காக பறவைகள் வராமல் தடுக்கப்படுகின்றன.
தினமும் சராசரியாக 33 விமானங்கள் கோவை விமான நிலையத்தில் இயக்கப்படுவது வழக்கம். ஒவ்வொருமுறை விமானம் தரையிறங்கும்போது புறப்படும் போதும் பறவைகளை விரட்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். இருப்பினும் கோவை விமான நிலையத்தில் விமானங்கள் மீது பறவைகள் மோதும் சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. மாதம் 3 முறை விமானங்கள் மீது பறவைகள் மோதுகின்றன.
''என்னதான் நடவடிக்கை எடுத்தாலும், ஏர்லைன்ஸ், பைலட்டுகள், விமான நிலைய ஆபரேட்டர்கள்கள், ஏர் டிராபிக் கன்ட்ரோலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே பறவைகளால் விமானங்களுக்கு ஏற்படும் ஆபத்தை முற்றிலும் தடுக்க முடியும்,'' என்கிறார் விமான பாதுகாப்பு புலனாய்வாளர் மைக்கேல் டேனியல்.