ARTICLE AD BOX
தென் கொரியாவில் கல்வி, வேலைவாய்ப்பில் கடும் போட்டி, பாலின சமத்துவமின்மை, அதிக வாழ்க்கை செலவு போன்ற காரணங்களால் திருமணத்தை இளைஞர்கள் தள்ளிப்போடுவது அதிகரித்துவந்தது. மேலும், பொருளாதார நிதிநிலை காரணமாகவும், திருமண வாழ்வில் ஆர்வமில்லாத போக்காலும் இளைய தலைமுறையினர், குழந்தை பெற ஆர்வம் காட்டவில்லை என்று பல அறிக்கைகள் தெரிவித்தன.
இறப்பை விட பிறப்பின் விகிதம் குறைந்து வருவதால் அந்த நாட்டின் 5 கோடியே 18 லட்சம் என்ற மக்கள்தொகை, 2050க்கு பிறகு 3 கோடியாக குறையும் எனக் கணிக்கப்பட்டது. திருமணம், குழந்தை பிறப்பு தொடர்பாக சமூக மனப்பான்மையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்ட காரணத்தால் 30 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை நாட்டில் அதிகரித்தது. இதையடுத்து திருமணம் மற்றும் குழந்தை பிறப்பை ஊக்குவிக்க வரி குறைப்பு மற்றும் மானியங்கள் போன்ற நடவடிக்கைகளை கடந்த 5 ஆண்டுகளாக தென்கொரிய அரசு மேற்கொண்டது.
இதன் விளைவாக 9 ஆண்டுகளுக்குப் பிறகு தென்கொரியாவில் பிறப்பு விகிதம் உயர்ந்துள்ளதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அதுவும் 0.75% உயர்வு என்பது 1980களுக்குப் பிறகு அந்த நாட்டில் பிறப்பு விகிதத்தில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அதிகரிப்பாக பார்க்கப்படுகிறது. தென்கொரியாவில் இந்த வருடத்தில் திருமணம் செய்து கொண்டோரின் எண்ணிக்கையும் 15 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
உலக அளவில் தென்கொரியாவிற்கு அடுத்தபடியாக ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் பிறப்பு விகிதம் குறைவாக இருக்கிறது. உலக அளவிலேயே பிறப்பு விகிதம் குறைந்து வருவது உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கையாக வருடம்தோறும் விடுக்கிறது.