ARTICLE AD BOX
நீர் அடித்து நீர் விலகுமா??? இந்த சொற்றொடரை நாம் அடிக்கடி கேட்டிருப்போம்.
அதாவது நீர் நீரை அடித்தால் என்ன ஆகும், விலகுமா? விலகாது என்று பொருள்.
நீரை நீர் அடிப்பது என்பதை நீர் மீது நீரை ஊற்றுவது என்று கொள்ளலாம். இங்கு அடிப்பதும், அடி வாங்குவதும் நீர் என்ற ஒன்று தான்.
நீரோடு நீர் சண்டைப் போட்டாலும் முடிவில் இரண்டும் விலகாமல் மாறாக சேர்ந்து இன்னும் வலுவாக இருக்கும்.
கல்லைக் கல் கொண்டு அடித்தால் இரண்டு கற்களுமே சேதமுறும்; விலகி விடும். ஆனால் நீரை நீரால் அடித்தால் இரண்டு பகுதி நீரும் இணையுமேயன்றி சேதமுறவோ, பிரிந்து நிற்கவோ செய்யாது.
அதைப் போல் நல்ல பரஸ்பரம் உள்ள மற்றும் மற்றவர்களின் நலனுக்காகவே வாழும் இரு நபர்கள் எத்தனை சண்டைப் போட்டாலும், அவர்களுக்குள் எத்தனை மனக்கசப்பு ஏற்பட்டாலும் இறுதியில் பிணைந்தே இருப்பார்கள்.
இரண்டு கெட்டவர்கள் சண்டைப் போட ஆரம்பித்தால், ஒருவரோடு ஒருவர் அடித்து கொள்வார்கள், முடிவில் காயத்துடன் இருவரும் விலகிக் கொண்டு சென்று விடுவார்கள் அல்லது மற்றவர்களால் விலக்கப்படுவார்கள்.
நல்லவர்கள் சில நேரங்களில் சண்டைப் போட்டு பிரிய முயற்சித்தால், பெரியவர்கள் அவர்களுக்கு ‘நீர் அடித்து நீர் விலகுமா’ என்று சொல்லி புரிய வைத்து அவர்களை மறுபடியும் இணைத்து வைப்பார்கள். அதற்குப் பிறகு அவர்களின் இணைப்பு மிகவும் வலுவாக இருக்கும்.
சில நேரங்களில் நமக்கு நெருங்கிய உறவினரோடு அல்லது நண்பரோடு அல்லது பக்கத்து வீட்டில் இருப்பவர்களிடம் சில மனஸ்தாபங்கள் ஏற்படலாம். சண்டை முற்றிப் போனால் நாம் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்வதையும் பேசுவதையும் நிறுத்தி விடுவோம். இதனால் நஷ்டம் இருவருக்குமே ஏற்படும். ஆனால் நடந்ததை மறந்து ஒன்று சேர்ந்தால் இருவருக்கும் நன்மையே உண்டாகும்.
நீர் அடித்து நீர் விலகாதது போல் நாமும் ஒருவருக்கொருவர் பரஸ்பரத்தோடு பிணைந்து வாழ வேண்டும். எப்படி நீரோடு நீர் அடிக்கும் போது இரண்டும் இணைந்து முன்பு இருந்ததை விட இன்னும் அதிகமான வேகத்தோடு பெருக்கெடுத்து ஓடுகிறதோ அதைப் போல நாமும் இணைந்து அன்போடும் பண்போடும் இன்பமாக வாழ முயற்சிப்போம். அதாவது நாம் எல்லோரும் ஓரே குலம், நம்மிடம் பணக்காரன் ஏழை என்ற ஏற்றத் தாழ்வு இல்லாமல் இணையும் போதுதான் இந்த சொற்றொடருக்கு ஏற்ற நன்மையை பெற முடியும்.
எப்போது நம் எல்லோருடைய மனதிலும் ஏற்ற தாழ்வு மனப்பான்மை, கர்வம், அகங்காரம், ஆணவம் போன்ற தீய குணங்கள் விலகுமோ அப்போது தான் நாமும் ஒருவரொடு ஒருவர் விலகாமல் இணைந்து இருக்க முடியும்.
தீய குணங்களை விலக்கி இனிதோடு இன்பமாக இணைந்திருப்போம்!!!