ARTICLE AD BOX
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சார்பில், போயிங் ஸ்டார்லைனர் ராக்கெட் மூலம் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் 5ஆம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றனர். அங்கிருந்து ஆய்வு நடத்திவிட்டு, ஜூன் 14ஆம் தேதி பூமிக்கு திரும்பும் நிலையில் அவர்கள் பயணித்த ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதன்காரணமாக இருவரும் அங்கேயே இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. 7 மாதங்களுக்கும் மேலாக அவர்கள் விண்வெளியில் தங்கி இருக்கின்றனர்.
இதற்கிடையே, இந்த மாதம் (பிப்ரவரி) அவர்களை அழைத்து வர நாசா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியை நாடியது. ஆனால் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் தற்போது கால தாமதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, மேலும் அவர்கள் பூமிக்குத் திரும்ப ஒரு மாத காலம் ஆகலாம் என நாசா தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலன் மார்ச் 12ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், இந்தியா, போலந்து, ஹங்கேரி ஆகிய நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்ல உள்ளனர். இந்த விண்கலன் மூலம் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்ப உள்ளனர் என நாசா தெரிவித்துள்ளது. இதற்கிடையே, ”அரசியல் காரணங்களால் அமெரிக்காவின் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் என இருவரும் சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கி உள்ளனர்” என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், ”முந்தைய அதிபர் ஜோ பைடன் அறிவுறுத்தலுக்கு ஏற்ப அவர்களை பூமிக்கு அழைத்து வரும் பணியை ஸ்பேஸ் எக்ஸ் துரிதமாக மேற்கொண்டது. இருந்தாலும் அது பல்வேறு காரணங்களால் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது. சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரை விரைவாக அழைத்து வர பணிகளை துரிதப்படுத்தி உள்ளோம். இருவரையும் விண்வெளியில் இருந்து வெற்றிகரமாக அழைத்து வருவோம். இதற்கு முன்பு எங்களது நிறுவனம் விண்வெளி மையத்தில் இருந்து விண்வெளி வீரர்களை பூமிக்கு பத்திரமாக அழைத்து வந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சுனிதா வில்லியம்ஸும் வில்மோரும், "நாங்கள் கைவிடப்பட்டதாக உணரவில்லை, சிக்கிக்கொண்டதாக உணரவில்லை” எனத் தெரிவித்திருந்தனர்.