சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் 5, 2024 அன்று போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றனர். இது ஒரு 10 நாள் பயணமாக திட்டமிடப்பட்டிருந்தது, இது போயிங் நிறுவனத்தின், முதல் மனிதர்களை ஏற்றிச் செல்லும் சோதனை பயணமாகும். விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்த பிறகு, ஹீலியம் கசிவு மற்றும் த்ரஸ்டர் (thruster) செயல்பாட்டில் பிரச்சினைகள் கண்டறியப்பட்டன.

இதனால், ஸ்டார்லைனர் பூமிக்கு திரும்புவது பாதுகாப்பற்றதாக கருதப்பட்டது. நாசா மற்றும் போயிங் ஆகியவை ஸ்டார்லைனரை மனிதர்களுடன் திருப்பி அனுப்புவதற்கு பதிலாக, அதை ஆளில்லாமல் பூமிக்கு திருப்பி அனுப்பின ஆகஸ்ட் 2024-ல் அது பத்திரமாக தரையிறங்கியது. சுனிதாவும் வில்மோரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
தற்போது அவர்கள் 9 மாதங்களுக்கு மேல் ISS-ல் உள்ளனர், இது அவர்களின் திட்டமிடப்பட்ட 10 நாள் பயணத்தை விட பல மடங்கு அதிகம். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் "க்ரூ-10" பணி அவர்களை மீட்க திட்டமிடப்பட்டது. பால்கன் 9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலம் மார்ச் 16, 2025 அன்று ஏவப்பட இருந்தது, ஆனால் ராக்கெட்டின் ஹைட்ராலிக் பிரச்சினையால் அது ஒத்திவைக்கப்பட்டது. இப்போது அவர்கள் இன்று மாலை புளோரிடா கடல் பகுதியை வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோரின் பணி முதலில் ஒரு வாரம் மட்டுமே நீடிக்கும் என்று திட்டமிடப்பட்டது, இப்போது ஒன்பது மாதங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் இருவரும் விண்வெளியில் 287 நாட்களை கழித்துள்ளனர்.
இந்தநிலையில், இரண்டு விண்வெளி வீரர்களும் திரும்பி வரத் தயாராகும் நிலையில், அவர்களின் நீண்டகால பணிக்கு நாசா அவர்களுக்கு இழப்பீடு வழங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றி நாசாவில் இருந்து ஓய்வு பெற்ற விஞ்ஞானியான கேத்தரீன் கிரேஸ் கேடி கோல்மேன் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கூறும்போது, நாசா விஞ்ஞானிகளின் கூடுதல் பணிநேரத்திற்காக சிறப்பு சம்பளம் என எதுவும் கிடைக்காது. அவர்கள் பணியாளர்களாக இருந்தபோதும், பூமியில் எப்போதும் மேற்கொள்ளும் வேலைக்காக பயணம் செய்வது போன்றே அவர்களுடைய விண்வெளி பயணநேரமும் கணக்கில் கொள்ளப்படும்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும்போது, உணவு மற்றும் வாழ்க்கைக்கான செலவுகள் உள்ளிட்ட நாசாவின் சம்பளத்துடன் வழக்கம்போல் கிடைக்கும் ஊதியமே அவர்களுக்கு கிடைக்கும். ஆனால், கூடுதல் இழப்பீட்டு தொகை எனும்போது, நாள் ஒன்றுக்கு ரூ.347 (4 அமெரிக்க டாலர்) என்ற சொற்ப அளவிலான பணமே கிடைக்கும். அந்த வகையில், 287 நாட்கள் இருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்துள்ளனர். இதனால் ஏறக்குறைய ரூ.1 லட்சம் (1,148 அமெரிக்க டாலர்) கூடுதல் இழப்பீட்டு தொகையாக கிடைக்கும்.
2010-11 ஆம் ஆண்டில் கோல்மனின் 159 நாள் பயண அனுபவத்தின் அடிப்படையில் அவர் தோராயமாக 636 டாலர் ஊதியத்தைப் பெற்றார். 2 விஞ்ஞானிகளும் ஜி.எஸ்.-15 சம்பள பிரிவில் வருபவர்கள். இந்த உயர் வகை பிரிவின் கீழ் வரும் ஊழியர்களுக்கு ஆண்டு அடிப்படை சம்பளம் ரூ.1.08 கோடி முதல் ரூ.1.41 கோடி வரை (12 லட்சத்து 5 ஆயிரத்து 133 அமெரிக்க டாலர் முதல் 1 லட்சத்து 62 ஆயிரத்து 672 அமெரிக்க டாலர் வரை) இருக்கும். சர்வதேச விண்வெளி நிலையத்தில் 9 மாதங்கள் தங்கியிருந்த இருவருக்கும் ரூ.81 லட்சம் முதல் ரூ.1.05 கோடி வரை (93 ஆயிரத்து 850 அமெரிக்க டாலர் முதல் 1 லட்சத்து 22 ஆயிரத்து 4 அமெரிக்க டாலர் வரை) சம்பளம் கிடைக்க பெறும். கூடுதல் ஊக்கத்தொகையையும் சேர்த்து, அவர்களுக்கு கிடைக்கும் மொத்த சம்பளம் ரூ.82 லட்சம் முதல் ரூ.1.06 கோடி வரை (94 ஆயிரத்து 998 அமெரிக்க டாலர் முதல் 1 லட்சத்து 23 ஆயிரத்து 152 அமெரிக்க டாலர் வரை) இருக்கும்.