காஸ்ட்ரோல் இந்தியா லிமிடெட் நிறுவனம் வாகன மற்றும் தொழில்துறை மசகு எண்ணெய் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்திய மசகு எண்ணெய் சந்தையில் 2வது பெரிய நிறுவனம் காஸ்ட்ரோல் இந்தியா. மேலும் இந்நிறுவனம் ஒட்டு மொத்த சந்தையில் சுமார் 20 சதவீத பங்கினை கொண்டுள்ளது.
இந்நிறுவனம் தொடர்ந்து லாபம் ஈட்டி வருவது மற்றும் பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் வழங்கி வருவதால், இது முதலீட்டாளர்களால் அதிக விரும்பப்படும் நிறுவன பங்காக உள்ளது. காஸ்ட்ரோல் இந்தியா நிறுவனம் அண்மையில் தனது கடந்த டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை அறிவிததது. மேலும், பங்குதாரர்களுக்கு இறுதி டிவிடெண்ட் மற்றும் சிறப்பு டிவிடெண்டும் அறிவித்தது.

2025 பிப்ரவரி 3ம் தேதியன்று பங்குச் சந்தை அமைப்பிடம் காஸ்ட்ரோல் இந்தியா நிறுவனம் தாக்கல் செய்த அறிக்கையில், நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, 2024 டிசம்பர் 31ம் தேதியுடன் நிறைவடைந்த நிதியாண்டுக்கு பங்குதாரர்களுக்கு ரூ.5 முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றுக்கு ரூ.9.50 இறுதி டிவிடெண்ட் (சிறப்பு டிவிடெண்ட் ரூ.4.50 உட்பட) வழங்க பரிந்துரைத்தது.
இது நிறுவனத்தின் 47வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டது என்று தெரிவித்து இருந்தது. இந்த செய்தி முதலீட்டாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது. இந்நிறுவனம் ஜனவரி-டிசம்பர் காலத்தை நிதியாண்டாக கொண்டு செயல்படுகிறது.
காஸ்ட்ரோல் இந்தியா நிறுவனம் கடந்த டிசம்பர் காலாண்டில் லாபமாக ரூ.271.39 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 12 சதவீதம் அதிகமாகும். 2024 டிசம்பர் காலாண்டில் காஸ்ட்ரோல் இந்தியா நிறுவனத்தின் வருவாய் 7.1 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.1,353.89 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் விற்பனை அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணம். கடந்த டிசம்பர் காலாண்டில் இந்தியாவின் இரு சக்கர வாகனங்கள் விற்பனை 3 சதவீதமும், வர்த்தக வாகனங்கள் விற்பனை 1.2 சதவீதமும் வளர்ச்சி கண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. வாகன விற்பனை அதிகரிப்பும் இந்நிறுவனத்தின் என்ஜின் ஆயில் விற்பனை அதிகரிப்புக்கு ஒரு காரணம்.
மோதிலால் ஓஸ்வால் பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம், காஸ்ட்ரோல் இந்தியா பங்கு குறித்த தனது மதிப்பீடான வாங்கலாம் என்பதை தொடர்ந்து மாற்றம் இன்றி வைத்துள்ளது. மேலும் இப்பங்கின் இலக்கு விலையை மாற்றாமல் ரூ.260ஆக வைத்துள்ளது. கோடக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விடிஸ், காஸ்ட்ரோல் இந்தியா பங்கு குறித்த தனது மதிப்பீட்டை விற்பனை என்பதில் இருந்து வாங்கலாம் என்று தரம் உயர்த்தியுள்ளது. மேலும், இந்நிறுவனம் நிர்ணயித்து இருந்த பங்கின் இலக்கு விலையான ரூ.200ஐ காட்டிலும் அதிக விலையில் தற்போது காஸ்ட்ரோல் பங்கு வர்த்தகமாகிறது. காஸ்ட்ரோல் இந்தியா பங்குகள் இன்று எக்ஸ் டிவிடெண்ட் அடிப்படையில் வர்த்தகமானது.
கடந்த ஜனவரி 28ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே காஸ்ட்ரோல் இந்தியா பங்கு புதிய 52 வார குறைந்தபட்சமான ரூ.162.80க்கு சென்றது. இன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் இந்நிறுவன பங்கின் விலை ரூ.222.05ஆக இருந்தது. தற்போது இப்பங்கின் விலை அதன் 52 வார குறைந்தபட்ச விலையை காட்டிலும் 36 சதவீதம் அதிகமாக உள்ளது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.