இண்டஸ் இண்ட் (Indus Ind) வங்கியில் தங்களின் பங்குகளை அதிகரிப்பதற்கு சரியான நேரம் வந்திருப்பதாக இண்டஸ் இண்ட் இன்டர்நேஷனல் ஹோல்டிங் (Indus Ind international holding) லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் அசோக் இந்துஜா தெரிவித்துள்ளார். இந்த நிறுவனத்தில் புரமோட்டராக பங்குகளை அதிகரிப்பதற்கு இதுதான் பொருத்தமான நேரம் என கருதுவதாக தெரிவித்துள்ளார்.
இண்டஸ் இண்ட் வங்கிக்கு தேவைப்பட்டால் கூடுதலாக மூலதனங்களை வழங்கவும் புரமோட்டர்கள் தயாராக இருக்கிறோம் என அவர் கூறியுள்ளார். இண்டஸ் இண்ட் இன்டர்நேஷனல் ஹோல்டிங் லிமிடெட் நிறுவனம் ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது அடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இதன் தலைவர் அசோக் பி இந்துஜா, இண்டஸ் இண்ட் வங்கி பிரச்சனை குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

இண்டஸ் இண்ட் வங்கியில் தற்போது தங்களுக்கு 15 சதவீத பங்குகள் இருப்பதாகவும் இதனை 26 சதவீதமாக உயர்த்துவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி ஏற்கனவே ஒப்புதல் அளித்து இருப்பதாகவும் குறிப்பிட்டார். ரிசர்வ் வங்கி தன்னுடைய இறுதி ஒப்புதலை அளிப்பதற்காக காத்திருப்பதாக கூறி இருக்கும் அவர், அனுமதி கிடைத்தவுடன் பங்குகளை 26 சதவீதம் வரை அதிகரிப்போம் எனக் கூறியுள்ளார்.
அண்மைக்காலமாக இண்டஸ் இண்ட் வங்கி குறித்து அடிக்கடி நாம் செய்திகளில் பார்க்க முடிகிறது. இதற்கு காரணம் திடீரென இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்புகள் சரிவடைந்தது தான். கடந்த வாரம் இந்த வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரிக்கு ஒரு ஆண்டு மட்டுமே பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது .இதனால் வங்கியின் மீதான நம்பிக்கை இழந்த முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்ய தொடங்கினர். மேலும் இந்த வங்கியின் கணக்குகளில் சில மோசடிகள் நடந்ததாகவும் அது தொடர்பாக விசாரிக்க வங்கி சார்பாக ஒரு வெளிப்புற நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த தகவலை அடுத்து இண்டஸ் இண்ட் வங்கியின் பங்குகள் கணிசமான அளவு சரிவை சந்தித்தன.
கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அன்று ஒரே நாளில் 27 சதவீதம் வரை சரிந்து சந்தை மூலதனத்திலும் பல ஆயிரம் கோடியை இழந்தது. இதனால் நாடு முழுவதும் இண்டஸ் இண்ட் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களுடைய பணம் பாதுகாப்பாக இருக்கிறதா என பீதி அடைந்தனர். இந்த நிலையில் இண்டஸ் இண்ட் வங்கியின் நிதிநிலைமை வலுவாக இருப்பதாகவும் தங்களுடைய சேமிப்புகள் குறித்து வாடிக்கையாளர்கள் கவலை கொள்ள வேண்டாம் எனவும் ரிசர்வ் வங்கி உறுதி அளித்தது.
தற்போது முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் பங்குகளை அதிகரிப்பதற்கும், மூலதனத்தையும் அதிகரிக்கும் புரமோட்டர்கள் தயாராக இருக்கின்றனர் என்ற செய்தியை அசோக் இந்துஜா வெளியிட்டுள்ளார் . இதனிடையே மார்ச் 11ஆம் தேதி 655 என்ற அளவில் வர்த்தகமான இண்டஸ் இண்ட் பங்கு மதிப்பு மார்ச் 19ஆம் தேதி 692 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது.