ARTICLE AD BOX
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்து கருக்கலைப்பு செய்ததாக கடந்த 2011ம் ஆண்டு நடிகை விஜயலெட்சுமி காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதையடுத்து போலீசார் சீமானுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
வழக்கில் இதுவரை காவல்துறையினர் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில், ‘பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதால், இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது’ என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. காவல்துறையினர் 12 வார காலத்துக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
இதனால், வளசரவாக்கம் அனைத்து மகளிர் போலீசார் மீண்டும் வழக்கு விசாரணையை தொடங்கியுள்ளனர். அதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வருகிற 27 ம் தேதி (நாளை) விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பி உள்ளனர். நாளை காலை வளசரவாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெங்களூருவில் வசித்து வரும் நடிகையிடம் வளசரவாக்கம் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. வழக்கு குறித்த புதிய ஆதாரங்களை சேகரித்து வாக்குமூலங்கள் பெறப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
நாளை சீமான் விசாரணைக்கு ஆஜராகும் போது நடிகையின் வாக்குமூலத்தை மையமாக வைத்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.