ARTICLE AD BOX
பாட்னா,
பீகார் மாநிலத்தில் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜனதா கூட்டணி அரசு நடந்து வருகிறது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம், பா.ஜனதாவுடன் நிதிஷ்குமார் கைகோர்த்த நிலையில், பா.ஜனதாவை சேர்ந்த எம்.எல்.ஏ., எம்.எல்.சி.க்கள் மந்திரிசபையில் சேர்ந்தனர்.
இந்நிலையில், நிதிஷ்குமார் மந்திரிசபை நேற்று விஸ்தரிக்கப்பட்டது. புதிதாக 7 மந்திரிகள் சேர்க்கப்பட்டனர். கவர்னர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில், கவர்னர் ஆரிப் முகமது கான், 7 பேருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 7 பேரும் பா.ஜனதாவை சேர்ந்தவர்கள் ஆவர். எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர்.
இத்துடன், மந்திரிகள் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. 243 பேர் கொண்ட சட்டசபையில், இதுதான் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச மந்திரிகள் எண்ணிக்கை ஆகும்.
ஜிபேஷ் குமார், சஞ்சய் சரோகி, சுனில்குமார், ராஜுகுமார் சிங், கிருஷ்ணகுமார் மந்து, விஜய்குமார் மண்டல், மோதிலால் பிரசாத் ஆகியோர் புதிய மந்திரிகள் ஆவர். இவர்களில், ஜிபேஷ் குமார், கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம்வரை மந்திரியாக இருந்தார். பா.ஜனதாவுடனான உறவை நிதிஷ்குமார் துண்டித்தவுடன் பதவி இழந்தார். தற்போது மீண்டும் மந்திரியாகி உள்ளார்.
சஞ்சய் சரோகி, சுனில்குமார், ராஜுகுமார் சிங் ஆகியோர் ஐக்கிய ஜனதாதளத்தில் இருந்து பா.ஜனதாவுக்கு தாவியவர்கள் ஆவர். ஜிபேஷ்குமார், ராஜுகுமார் சிங் ஆகியோர் மேல்சாதியை சேர்ந்தவர்கள்.
சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு 2 நாள் இருக்கும்போது, மந்திரிசபை விஸ்தரிப்பு நடந்துள்ளது. சட்டசபை தேர்தல் அறிவிப்புக்கு முன்பு, இதுதான் கடைசி பதவியேற்பாக கருதப்படுகிறது. பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நேற்று முன்தினம் பாட்னாவில், பீகார் மாநில பா.ஜனதா மையக்குழு கூட்டம் நடந்தது. மறுநாளில், மந்திரிசபை விஸ்தரிப்பு நடந்துள்ளது.
முன்னதாக, நேற்று காலை, மாநில பா.ஜனதா தலைவர் ஜெய்ஸ்வால், தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். 'ஒருவருக்கு ஒரு பதவி' என்ற பா.ஜனதா கொள்கை அடிப்படையில் பதவி விலகுவதாக அவர் கூறினார்.