ARTICLE AD BOX
அரசமைப்பு சட்டத்தில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளிலும் இல்லாத ஒன்றுதான் பொதுவான மொழியாக இருக்க முடியுமே தவிர, அதில் இருக்கும் இந்தி மொழி பொதுவானதாக இருக்க முடியாது என்று விசிக துணை பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.
மும்மொழி கொள்கை மூலம் இந்தியை திணிக்க முயலும் மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது குறித்து விசிக துணை பொதுச்செயலார் ஆளுநர் ஷாநவாஸ் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- மும்மொழி கொள்கை விவகாரத்தில் அநீதியாக மத்திய அரசு நடந்துகொள்கிறது. தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது. இந்தி பேசாத மாநிலங்களின் மீது போர் தொடுக்கிறது. நாங்கள் சொல்லும் நிபந்தனைகளை ஏற்காவிட்டால், புதிய கல்விக் கொள்கையை ஏற்கா விட்டால் நிதி தர மாட்டோம் என்று மத்திய அமைச்சர் சொல்கிறார். எவ்வளவு பெரிய வரம்பு மீறல். மாநில உரிமைகளுக்கு எதிரான ஒரு செயல் இது. இதனை பார்த்து விட்டு கொந்தளிக்காமல் எப்படி இருக்க முடியும்?. இதையெல்லாம் எதிர்த்து தன்னை நிரூபித்த மாநிலம் தமிழ்நாடு. இந்த கொந்தளிப்பு மிகவும் குறைவு என்பது தான் எனது கருத்து. எப்படி மொழிப்போராட்டம் தொடங்கிய போது, இந்தித் திணிப்பை எதிர்த்து எல்லோரும் களத்திற்கு வந்து பார்க்கும் இடமெல்லாம் போராட்டக்களமாக தமிழ்நாடு கொதி நிலையில் இருந்ததோ, அந்த நிலையை நாம் அடைய வேண்டும்.
ஏன் என்றால் இது தமிழ்நாட்டின் மீது நிகழ்த்தப்பட்ட நேரடியான ஒரு தாக்குதல் ஆகும். எப்படி ஒரு மத்திய அமைச்சர், ஒரு மாநிலத்திற்கு நிதி தர மாட்டேன் என்று எப்படி சொல்லலாம். நாங்கள் வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் தான், விதிகளை ஏற்றுக்கொண்டால் தான் நிதி தருவோம் என்றால் உங்கள் வீட்டு காசையா? எடுத்துத்தர போகிறீர்கள். பாஜக அலுவலகத்தில் இருந்து எடுத்துத்தர போகிறீர்களா? அல்லது ஆர்எஸ்எஸ் கருவூலத்தில் இருந்து எடுத்துத்தர போகிறீர்களா? அது எங்கள் பணம். நமம காசு. மத்திய அரசுக்கு நாம் கட்டுகிற வரிப்பணமாகும். அதை நமது வளர்ச்சிப்பணிகளுக்கு, திட்டங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று கேட்கிறோம். அனைத்து மாநிலங்களுக்கும் கொடுப்பதை போன்றுதான் எங்களுடைய பங்கை கொடுங்கள் என்றுதான் கேட்கிறோம்.
நாங்கள் போடும் நிபந்தனையை ஏற்றுக் கொண்டால்தான் நிதியை கொடுப்போம் என்கிறார் மத்திய அமைச்சர். மத்திய அரசின் கல்வி கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் நிதி வழங்குவோம் என்கிறார். உங்கள் கல்விக் கொள்கையின் லட்சனம் என்ன என்று சொல்லுங்கள்? தமிழ்நாடு 50 சதவீதத்திற்கு மேல் உயர்க்கல்வி படிப்போர் விகிதம் வைத்துள்ளது. மாணவர்களுக்கு, மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்குகிறோம். காலை உணவுத்திட்டம் நாட்டில் எங்கும் இல்லை. இங்கு வைத்துள்ளோம். நாட்டிலேயே சிறந்த பல்கலைக்கழகம் அண்ணா பல்கலைக் கழகம், சிறந்த ஐஐடி சென்னை ஐஐடி என்று நீங்கள்தான் சொல்கிறீர்கள். தமிழ்நாட்டில் சாதாரண கல்விக்கூடம் முதல் உயர்கல்விக்கூடம் வரை எல்லாமே சிறப்பாக உள்ளது. கல்விக்கட்டமைப்பு சிறப்பாக உள்ளது. நாட்டிலேயே கல்விக்காக பட்ஜெட்டில் அதிகம் நிதி ஒதுக்கிடும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இவை எல்லாமே உங்களுக்கு தெரிந்திருக்கிறது. அப்படி இருந்தும் பிற்போக்குத்தனமான கல்வி கொள்கையை கொண்டு வந்து அமல்படுத்துங்கள் என்றால் எப்படி?
இருமொழி கொள்கை என்பது நாடாளுமன்றத்தில், அரசியல் சாசன அமர்வில், நீண்ட விவாதங்களுக்கு பின்னர் எடுக்கப்பட்ட முடிவு. அண்ணா இதுபற்றி பேசவில்லையா?- அரசியல் நிர்ணய சபையில் காயிதே மில்லத் பேசவில்லையா? இந்தியை ஏன் ஏற்க மாட்டோம். ஆங்கிலத்தை ஏன் ஏற்கிறோம் என்பது மிக நீண்ட விவாதத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு. ஏன் தமிழ்நாடு இருமொழி கொள்கையை பின்பற்றுகிறது என்றால்? இது ஒரு கட்சியின் கொள்கை கிடையாது. தமிழ்நாட்டின் கொள்கை. பாஜகவை தவிர தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக் கொள்கிற கொள்கைதான் இருமொழி கொள்கை. ஏன் ஆங்கிலத்தை ஏற்கிறோம். ஆங்கிலம் பொதுவான மொழி. அரசியலமைப்பு சட்டம் 22 மொழிகளை ஏற்றுக்கொண்டுள்ளது. இந்தியாவிற்கு இந்தி தான் தேசிய மொழி என்று சொல்லப்பட்டிருக்கிறதா? தேசிய மொழி என்ற ஒன்று உள்ளதா? தமிழிசை, அண்ணாமலை சொல்வார்களா? 22 தேசிய மொழிகளையும், சமமாக பார்கக் வேண்டிய மத்திய அரசு சமமாக நடத்துகிறதா? பட்ஜெட்டில் இந்திக்கு நிதி ஒதுக்கிறார்கள். ஏன் என்று கேட்டால் அது நிறைய மாநிலங்கள் பேசுகிற மொழி என்கிறார்கள். சமஸ்கிருதத்திற்கு ஏன் ஒதுக்கப்பட்டது என்றால் அது யாருமே பேசதா மொழி என்கின்றனர். அப்போது 22 மொழிகளில் ஒன்றை எடுத்துவந்து இதுதான் பொதுவான மொழி என்று சொன்னால் எப்படி. இந்த 22லும் இல்லாத ஒன்றுதான் பொதுவான மொழியாக இருக்க முடியுமே தவிர, அதில் இருக்கும் ஒன்று பொதுவானதாக இருக்க முடியாது. ஆங்கிலம் 22க்கும் பொதுவான ஒன்று.
மொழி ஒன்றும் பேச்சுக்கான கருவி இல்லை. அது கல்வியை, வேலைவாய்ப்பை தீர்மானிக்கிறது. நாளை இந்தி மொழியை ஏற்றுக்கொண்டோம் என்றால், இந்தி அடிப்படையில் தேர்வு நடைபெறும். இந்திக்காரர்கள் அந்த தேர்வை மட்டும் படித்தால் போதும். ஆனால் தமிழர்கள் இந்தி என்கிற மொழியையும், தேர்வுக்காகவும் படிக்க வேண்டும். இருவரும் சமமான குடிமக்கள்தான். இந்திக்காரர்களுக்கு அந்த வழீ எளிதாக உள்ளது. தமிழர்களுக்கு கடினமானதாக மாறுகிறது. இதே ஆங்கிலம் என்று வைத்தால் இருவரும் ஆங்கிலம் மொழியையும் படிக்க வேண்டும். தேர்வுக்கும் படிக்க வேண்டும். அப்போது இருவருக்கும் சமமானதாக மாறிவிடும். அப்போது இந்தி அடிப்படையில் ஒன்று வந்துவிட்டால் அது இந்தி பேசுபவர்களுக்குத்தான் வாய்ப்பாக அமையுமே தவிர, இந்தி பேசாத மக்களுக்கு அநீதியானது. பிற மொழிகளுக்கு ஆசிரியர்கள் இல்லை என்று கூறி, மாணவர்களின் மீது மும்மொழி கொள்கை என்கிற பெயரில் இந்திதான் திணிக்கப்படும். அதனால் தமிழ்நாடு எதிர்க்கிறது.
சிபிஎஸ்இ பள்ளிக்கூடங்களில் இந்தி மொழி கற்பிக்கப்படுகிறது. அப்படி எனில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஏன் ஏழை மாணவர்களுக்கு கல்வி கொடுக்கக்கூடாது. சிபிஎஸ்இ பள்ளிகளில் 25 சதவிகிதம் ஏழை மாணவர்களை சேர்க்க வேண்டும். அதற்கான கட்டணத்தை மத்திய அரசே வழங்கும் என்று ஏன் சொல்லக்கூடாது? ஏன் மாநில அரசின் கல்விக்கூடத்தில் அதை செய்ய வேண்டும் என்று திணிக்கிறீர்கள். எதை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது என்று மாநில அரசு அதிகாரம் பெற்றுள்ளது. மாநிலப்பட்டியலில் இருந்த கல்வி தற்போது ஒத்திசைவு பட்டிலில் மாற்றப்பட்டுள்ளது. எனவே கல்வி தொடர்பாக மத்திய அரசு ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்றால் மாநில அரசுடன் கலந்தாலோசிக்க வேண்டும். மாநில அரசு விரும்பவில்லை என்றால் விட்டுவிட வேண்டும். அப்படி இருக்கும்போது மாநில அரசின் பாடத்திட்டத்தில் வந்து தலையிடுவது, மாநில அரசின் கல்விக்கொள்கையில் தலையிடுவது ஏன்? கேட்டால் ஏழை மாணவர்களுக்கு என்கிறீர்கள். அப்போது ஏழை மாணவர்களுக்கு நீங்களே வழங்கலாமே. இந்தி பிரச்சார சபாவில் இந்தி படிக்கக்கூடாது என்று யாரும் தடுக்கவில்லை.
சம்பந்தம் இல்லாமல் எங்கள் அரசின் மீது, மாநிலத்தின் மீது, பாடத்தின் மீது இந்தியை ஏன் திணிக்கிறீர்கள்?. எந்த ஒரு தனி மனிதரும் மத்திய அரசிடம் உரிமம் பெற்று சட்டப்பூர்வமாக சிபிஎஸ்இ பள்ளிகளை தொடங்கலாம். பள்ளிகள் தொடங்குவது குறித்து தனி மனிதர்களிடம் போய் கேள்வி எழுப்ப முடியுமா? ஒரு அரசு எடுக்கக்கூடிய முடிவை நோக்கித்தான் கேள்வி எழுப்ப முடியும். மத்திய அரசை நோக்கி தான் கேள்வி எழுப்ப முடியுமே தவிர அண்ணாமலை ஏன் உங்கள் பிள்ளையை அங்கு படிக்கவைக்கவில்லை. தமிழிசை உங்கள் பிள்ளை எங்கே படித்தார் என்று கேள்வி எழுப்புகிறோமா? தமிழிசை , அண்ணாமலை மட்டும் அரசுப்பள்ளியில் படித்தீர்கள்,இப்போது ஏன் எல்லோரிடமும் இந்தியை திணிக்க வருகிறீர்கள் என்று கேட்கலாமா? இந்த கேள்வி அவர்களுக்கு பொருந்துமல்லவா? ஆனால் அப்படி நாங்கள் யாரும் கேட்பது கிடையாது. காரணம் இது தனிமனிதர்கள் குறித்த விமர்சனம் கிடையாது. மத்திய அரசிடம் நமக்கு கேட்க வேண்டிய உரிமை உள்ளளது. நமக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. ஏனென்றால் 22 மொழிகளுக்கும் பொதுவாக நடந்துகொள்ள வேண்டிய அரசு நடந்துகொள்ளவில்லை என்கிறபோது, அரசை நோக்கி கேள்வி எழுப்புகிறோம். அதற்கு பதில் இருந்தால் சொல்லலாமே தவிர. நீ உன் பிள்ளையை அங்கு படிக்க வைக்கவில்லையா? நீ பள்ளிக்கூடம் நடத்தவில்லையா? என கேட்பது அபத்தமான வாதம் ஆகும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.