மதுரையில் தென்மாவட்ட தபால்துறை வாடிக்கையாளர்களுக்கான குறைதீர்ப்பு முகாம்

3 hours ago
ARTICLE AD BOX

மதுரை,

தென்மாவட்டங்களை சேர்ந்த தபால் துறை வாடிக்கையாளர்களுக்கான குறைதீர்ப்பு முகாம் மதுரையில் நடக்க இருக்கிறது. இது குறித்து தென்மண்டல தபால்துறைத்தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

"மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய தென்மாவட்டங்களை சேர்ந்த தபால்துறை வாடிக்கையாளர்களுக்கான குறை தீர்ப்பு முகாம் வருகிற 19-ந் தேதி மதுரையில் நடக்கிறது. மதுரை பீ.பி.குளத்தில் உள்ள தென்மண்டல தபால்துறைத்தலைவர் அலுவலகத்தில் நடக்க உள்ள இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்பும், வாடிக்கையாளர்கள் தங்களது புகாரில் தபால் அனுப்பிய தேதி, அனுப்பியவர் பெயர், முகவரி, பெறுபவரின் பெயர் முகவரி, ரசீது எண், மணியார்டர், விரைவு தபால், பதிவுதபால் ஆகியன குறித்த விவரங்களை குறிப்பிட வேண்டும்.

சேமிப்பு வங்கிக்கணக்கு, தபால் காப்பீடு, கிராமிய தபால் காப்பீடு தொடர்பான புகார்களில் கணக்கு எண், கணக்கு வைத்திருப்பவர்களின் பெயர், முகவரி, பாலிசிதாரரின் பெயர், முகவரி, பணம் செலுத்திய விவரம், பணம் செலுத்திய தபால் அலுவலகம், தபால் துறையில் இருந்து பெறப்பட்ட கடிதங்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை புகாருடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

வாடிக்கையாளர்கள் தங்களது புகார் குறித்து ஏற்கனவே மனு கொடுத்து தபால் கண்காணிப்பாளர் அளித்த பதிலில் திருப்தியடையாதவர்கள் மட்டும் மீண்டும் தங்களது குறைகளை அனுப்ப வேண்டும். இந்த முகாமில் புதிதாக பெறப்படும் புகார்களின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. புகார்களை தபால் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும். தனியார் கூரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும் புகார்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

வாடிக்கையாளர்கள் தங்களது குறைகளை தபால் சேவை குறைதீர்க்கும் முகாம், உதவி இயக்குனர், தென் மண்டல தபால்துறைத்தலைவர் அலுவலகம், மதுரை-2 என்ற முகவரிக்கு வருகிற 8-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும். தபால் உறையின் மீது, "தபால் சேவை குறை தீர்க்கும் முகாம் -மார்ச் 2025" என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Read Entire Article