ARTICLE AD BOX
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் முன்பதிவு செய்து வாடகை காரில் பயணித்தபோது இளம்பெண்ணுக்கு டிரைவர் உள்பட 2 பேர் பாலியல் தொல்லை கொடுத்தனர். தப்பி ஓடியபோதும் இளம்பெண்ணை துரத்திச் சென்று அத்துமீறிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பெங்களூரு பானசவாடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு இளம்பெண் வசித்து வருகிறார். அவர், கம்மனஹள்ளி அருகே சிக்கமனஹள்ளியில் இருந்து வெளியே செல்வதற்காக வாடகை காரை முன்பதிவு செய்திருந்தார். அதன்படி, நேற்று முன்தினம் அதிகாலை 2 மணியளவில் சிக்கமனஹள்ளியில் இருந்து வாடகை காரில் செல்வதற்காக இளம்பெண் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாடகை காரில் இளம்பெண் ஏறினார். அந்த காரில் டிரைவர், மற்றொரு நபர் இருந்தனர். கார் புறப்பட்டதும் திடீரென காரில் இருந்த மற்றொரு நபரும், டிரைவரும் இளம்பெண்ணுடன் தகாத வார்த்தையில் பேசி, பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளனர். இதனால் பதறிப்போன இளம்பெண் காரில் இருந்து இறங்கி ஓடினார்.
ஆனாலும் 2 பேரும் இளம்பெண்ணை விடாமல் துரத்திச் சென்று நடுரோட்டில் வைத்தே பாலியல் தொல்லை கொடுத்து மானபங்கம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த இளம்பெண்ணை பிடித்து கீழே தள்ளினார்கள். இதனால் அந்த இளம்பெண் சத்தம் போட்டு கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். உடனே காரில் ஏறி 2 பேரும் தப்பிச் சென்று விட்டனர். இதன் காரணமாக அவர்களிடம் இருந்து இளம்பெண் தப்பினார்.
இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்கள் உண்மையிலேயே கார் டிரைவர்களாக என்பது தெரியவில்லை. இதுகுறித்து பானசவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் மர்மநபர்களை பிடிக்க அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி ஆய்வு செய்து வருவதுடன், காரின் பதிவு எண் மூலமாக டிரைவர் உள்பட 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.