வருண் சுழலில் தத்தளித்த நியூசிலாந்து.. இந்தியா அபார வெற்றி! அரையிறுதியில் IND vs AUS மோதல்!

16 hours ago
ARTICLE AD BOX
Published on: 
02 Mar 2025, 6:04 pm

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் சிறந்த இரண்டு அணிகளாக இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பார்க்கப்படுகின்றன. பெரும்பாலான கிரிக்கெட் வல்லுநர்கள், இறுதிப்போட்டிக்கு தகுதிபெறக்கூடிய இரண்டு அணிகளாக இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளையே கணித்திருந்தனர்.

அந்தவகையில் நடப்பு சாம்பியன்ஸ் டிராபியின் கடைசி லீக் போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. இதில் வெற்றிபெறும் அணியே இறுதிப்போட்டியில் கோப்பை வெல்லும் என சொல்லப்பட்ட நிலையில், லீக் போட்டியாக இருந்தாலும் இப்போட்டியின் மீது எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே இருந்தது.

ஐசிசி தொடர்களில் எப்போதும் இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக இருந்துவரும் நியூசிலாந்து அணியை சமாளிக்க, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் என மூன்று ஸ்பின்னர்களுடன் சேர்த்து நான்காவது ஸ்பின்னராக வருண் சக்கரவர்த்தியை களமிறக்கியது இந்தியா.

4 ஸ்பின்னர்கள் தேவையா? சீமர்கள் இல்லாமல் இந்தியா சிக்கித் தவிக்க போகிறது என்ற விமர்சனங்கள் போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே வைக்கப்பட்டன.

5 விக்கெட்டுகள் வீழ்த்தி மிரட்டிய ஹென்றி..

பரபரப்பாக தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு சிறந்த ஃபார்மில் பந்துவீசிவரும் மேட் ஹென்றி, சுப்மன் கில்லை 2 ரன்னில் வெளியேற்றி அதிர்ச்சி கொடுத்தார். இந்திய கேப்டன் ரோகித் சர்மாவும் 15 ரன்னில் கேட்ச் கொடுத்து வெளியேற இந்தியா தடுமாறியது.

ஸ்ரேயாஸ் ஐயர்
ஸ்ரேயாஸ் ஐயர்

அழுத்தத்தில் இருந்த இந்திய அணியை மீட்டு எடுத்துவர 300வது ஒருநாள் போட்டியில் களமிறங்கிய கிங் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் ஒரு அசாத்தியமான கேட்ச் மூலம் விராட் கோலியை அவுட்டாக்கிய க்ளென் பிலிப்ஸ் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

’என்ன பா நடக்குது இங்க’ என புலம்பும் வகையில் 30 ரன்னுக்கே 3 விக்கெட்டை இழந்து தடுமாறியது இந்தியா. ஒரு மோசமான நிலையில் ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்சர் பட்டேல் இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 98 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அணியை மீட்டு எடுத்துவந்தனர்.

ஸ்ரேயாஸ் ஐயர்
ஸ்ரேயாஸ் ஐயர்

அக்சர் பட்டேல் 42 ரன்னில் அவுட்டாக, 4 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என மிரட்டிய ஸ்ரேயாஸ் ஐயர் 79 ரன்னில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். உடன் கேஎல் ராகுலும் 23 ரன்னில் வெளியேற, முக்கியமான நேரத்தில் விக்கெட்டுகளை கழற்றிய நியூசிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தியது. கடைசியாக வந்து போராடிய ஹர்திக் பாண்டியா 45 ரன்கள் அடிக்க, 50 ஓவரில் 249 ரன்களை மட்டுமே இந்திய அணியால் அடிக்க முடிந்தது. அபாரமாக பந்துவீசிய மேட் ஹென்றி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி மிரட்டிவிட்டார்.

வருண் சுழலில் சுருண்ட நியூசிலாந்து..

250 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய நியூசிலாந்து அணியில், ரச்சின் ரவீந்திராவை 6 ரன்னில் வெளியேற்றிய ஹர்திக் பாண்டியா முதல் விக்கெட்டை எடுத்துவந்தார். முகமது ஷமி மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் பவுண்டரிகளை விட்டுக்கொடுக்காமல் டைட்டாக பந்துவீச, 7வது ஓவரிலிருந்தே ஸ்பின்னர்களை எடுத்துவந்த கேப்டன் ரோகித் சர்மா, நியூசிலாந்து பேட்டர்கள் மீது அழுத்தம் போட்டார். அதன்பலனாக வில் யங்கை போல்டாக்கி இரண்டாவது விக்கெட்டை எடுத்துவந்தார் வருண் சக்கரவர்த்தி.

கேன் வில்லியம்சன்
கேன் வில்லியம்சன்

அடுத்தடுத்து பந்துவீசவந்த அக்சர் பட்டேல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் 3 பேரும் மும்முனை தாக்குதல் நிகழ்த்த, முக்கியமான நேரத்தில் விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து அணி தடுமாறியது. வருண் சக்கரவர்த்தியை எப்படி எதிர்கொள்வது என தெரியாமல் விழிபிதுங்கிய நியூசிலாந்து பேட்டர்கள் சீட்டுக்கட்டை போல விக்கெட்டுகளை சரியவிட்டனர். ஐசிசி தொடரின் முதல் போட்டியில் விளையாடிய தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

ஒருபுறம் விக்கெட்டுகளாக விழுந்தாலும் தனியொரு ஆளாக போராடிய வில்லியம்சன் 81 ரன்கள் அடித்தபோதும், அவரால் நியூசிலாந்து அணியை வெற்றிக்கு அழைத்துச்செல்ல முடியவில்லை. முடிவில் 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி பிரமாண்ட வெற்றியை பதிவுசெய்தது.

ஆட்டநாயகன் வருண் சக்கரவர்த்தி!
ஆட்டநாயகன் வருண் சக்கரவர்த்தி!

முடிவில் 4 ஸ்பின்னர்களுடன் செல்லும் இந்தியாவின் முயற்சி துபாய் மைதானத்தில் பலனளித்துள்ளது.

அரையிறுதியில் IND vs AUS..

இந்தவெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்த இந்திய அணி, அரையிறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. மற்றொரு அரையிறுதிப்போட்டியில் நியூசிலாந்தும், தென்னாப்பிரிக்காவும் மோதுகின்றன.

அரையிறுதியில் இந்தியா vs ஆஸ்திரேலியா மோதல்!
அரையிறுதியில் இந்தியா vs ஆஸ்திரேலியா மோதல்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதும் முதல் அரையிறுதிப்போட்டி மார்ச் 4-ம் தேதி துபாயில் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article