ARTICLE AD BOX
பாட்டல் ராதா இயக்குநர் தினகரன் சிவலிங்கத்தின் நேர்காணல் சிறப்புடன் விளங்கியது. அந்த நேர்காணலில் ‘நம்மைச் சுற்றி இருக்கும் மக்களை மதிப்பிடாமல் அவர்கள் வாழ்க்கையை எப்படி புரிந்துகொள்வது என்பதை பா. இரஞ்சித் புரியவைத்தார்’ என்று மனம் திறந்து சொன்ன தினகரன் சிவலிங்கத்தின் கருத்து என் இதயத்தை வெகுவாக நெகிழவைத்தது.
திசையாற்றுப்படையில், இரா. பிரபாகர் எழுதிய பகுதி நேர வேலை பாழாகும் உயர் கல்வி என்ற கட்டுரை மிக முக்கியமான கட்டுரை. ‘கவிதாபாரதி’யின் பெருவழிப்பாதை தொடரில் பாப்பம்பட்டி நடராஜனின் லட்சிய நோக்கமும் புகழும் மேன்மேலும் மிளிரட்டும் என வாழ்த்தியது மிகச் சிறப்பாக அமைந்தது.
தங்க. சங்கரபாண்டியன், பொழிச்சலூர்
பெருமை சேர்த்த தலைப்பு
தமிழ் மண்ணில் இரும்புக்காலம் 5300 ஆண்டுகளுக்கு முன் என்பது தமிழனுக்குப் பெருமை. பாட்டல் ராதா இயக்குநர் தினகரன் சிவலிங்கம் திரைப்படம் மூலம் புதிய கருத்துகளைக் கூறியுள்ளார். கல்லூரி மாணவர்கள் அவலத்தை பிரபாகர் சரியாக எழுதியுள்ளார். வறுமையின் கொடுமையிலிருந்து தங்களை பாதுகாக்க எப்படியெல்லாம் வாழவேண்டி உள்ளது. எழுத்தாளர் நீல பத்மநாபன் புத்தகம் விற்பனை செய்வதில் உள்ள சில அனுபவங்களை எழுதியுள்ளார். எஸ். ராமகிருஷ்ணனின் விசுவாசம் கட்டுரையில் எந்த முதலாளிக்கும் தொழிலாளிக்கு மேல் விசுவாசமில்லை என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
சண்முகவேல், கீழக்கலங்கல்
கல்வி பாதிக்கும்
திசையாற்றுப்படை படித்தேன். தாயுள்ளத்தோடு எழுதப்பட்ட கட்டுரை. பாட்டி வீட்டில் வளரும் தாய், தந்தையை இழந்த ஒரு மாணவன் -முதுகலை ஆங்கில இலக்கியம் படிப்பவன்- ஒரு திருமண விழாவில் பந்தி பரிமாறுவதை பார்த்தேன்.
‘கைச் செலவிற்கும் பாட்டி மருத்துவ செலவிற்கும் பணம் தேவைப்படுகிறது.’ என்றான். ‘தம்பி ஏதாவது பணம் வேணுமா?’ என்றபோது ‘வேண்டாங்கய்யா... என் உழைப்பின் மூலம் வாழ்ந்து வருகிறேன்' என்றான். ஷேக்ஸ்பியரும் ஷெல்லியும் கொடுக்காத பணத்தை திருமண விழா கொடுக்கிறது. இது நிச்சயம் கல்வியை பாதிக்கும்.
ஒரு பேக்கரியில் டீ குடித்துவிட்டு அந்த மாணவன் என்ன படிக்கிறான் என்று கேட்டுவிட்டு அவன் படிப்பு செலவிற்கு கொஞ்சம் பணம் கொடுத்துவிட்டு எழுத்தாளர் சுபரபாரதிமணியன் சொன்னது,‘பாவம் பஞ்சலிங்கம் இந்தப் பையன். படிப்புச் செலவிற்காக பார்ட் டைமாக பேக்கரியில் வேலை பார்க்கிறான். உழைப்போடு இயைந்த கல்வி உயர்வானது’. உண்மைதான் உழைப்போடு இணைந்த கல்வி உயர்வானதுதான்.
எஸ். பஞ்சலிங்கம், மடத்துக்குளம்
வியப்பு
‘விசுவாசத்தின் விலை’ அரசியல், சினிமா, இலக்கியம், சமூகம் என்ற பார்வையில் பலதரப்பட்ட ஆளுமைகளின் அழுத்தப்பார்வை வியப்பில் ஆழ்த்தியது.
காசி யோக அட்சயா, கோவை
சிறந்த சிறுகதை
நீல பத்மநாபனின் ‘தணியாத தாகமும் அபரிதமான மோகமும்’ கட்டுரை படித்தேன். தமிழ்ப் படைப்பாளிகளுக்கு தங்கள் படைப்பை வெளியிடுவது மலையைப் புரட்டும் மலைக்க வைக்கும் செயலாகவே இருந்து வந்திருக்கிறது.
அதுகுறித்து நீல பத்மநாபனின் ஆதங்கமும், விரக்தியும் நூற்றுக்கு நூறு உண்மை. மாற்றம் தேவை. மாறும் என நம்புவோம். ஜான் சுந்தரின் சிறுகதை படித்தேன். சில வரிகளில் மட்டுமே கட்டமைக்கப்பட்டிருக்கும் கருப்பண்ணன் பாத்திரம் நெஞ்சில் நிலைக்கும் வண்ணம் உள்ளது. தோலுறை போட்ட டைரியும் ரெக்சின் உறைபோட்ட டைரியும் மாறிமாறி கதை சொல்வதாக அமைக்கப்பட்டிருக்கும் யுக்தி பாராட்டிற்குரியது. சிறப்பானது. மெல்லிசைக் குழுவில் என்னென்ன வெல்லாம் நடக்கிறது என்பதை கதையாக்கி இருப்பது சிறப்பு.
முத்து வள்ளிமயில், முத்தரசநல்லூர்
இனிப்பு
அட்டைப்படத்தில் பொறித்திருந்த தமிழ் மண்ணில் தொடங்கிய இரும்புக்காலம்! விமர்சனமும் பதில்களும் இதழுக்கு மகுடம் சூட்டிய கட்டுரை எனலாம்.
தமிழர்களின் வரலாறு அற்புத மாகப் படம் பிடித்துக் காட்டப்பெற்றுள்ளது. இரும்புத் தாதுக்களை 1200 – 1400 டிகிரி செல்சியசில் உருக்கி இரும்பைப் பிரித்து எடுத்துப் பயன்படுத்தியது என்பது தமிழகத்தில்தான் முதன் முதலில் நடந்துள்ளது. சிவகளை என்பது சில ஏக்கர் நிலமல்ல, சுமார் 500 ஏக்கர்கள் கொண்ட ஈமக்காடு; மக்கள் வாழிடம் அல்ல. இந்தியாவில் ஹரப்பா நாகரிகம் உச்சத்திலிருந்தபோது தமிழ்நாட்டில் மக்கள் இரும்பின் பயன்பாட்டைப் பரவலாக அறிந்திருந்தார்கள் உள்ளிட்ட வரலாற்றுத் தகவல்களை – இரும்பின் தொன்மை என்பது 3000 ஆண்டுகளுக்கு மேல் தொன்மை கொண்டது. இரும்புக் காலத்தை உலகில் தமிழன்தான் தொடங்கினான் என்பது கரும்பாக இருக்கிற செய்திதானே என்று கட்டுரையாசிரியர் அவர்களின் பதிவு நிஜமாகவே இனித்தது.
பிரேமா அரவிந்தன், நடுவிக்கோட்டை
வெவ்வேறு கோணங்களில்
அந்தி மழை அணுகும் சிறப்புப் பக்கங்கள் என்றாலே தனி ருசி தான் ! அதிலும் விசுவாசத்தின் விலை என்று சிறப்புப் பக்கங்கள் ஆக்கியிருப்பது மகிழவும் நெகிழவும் வைக்கிறது. 'விசுவாசம்' பட நாயகன் அஜித்' அட்டையில் தலைப்பை ஃபிளாஷ் பண்ணியிருப்பது டபுள் கேம் ஆடியது போல் உள்ளது! ‘விசுவாசத்தைக் கண்டறிதல்' என்ற ராமகிருஷ்ணரின் தொகுப்பின் மூலம் கண்டறியப்பட்ட விவரங்கள் அருமை! ‘ராவ்’ ‘பிரின்சு' ‘மணா' ‘மாலன்' ‘சிவ பாலன்' ‘விதுரன்' ‘சுப குணராஜன்' ‘கருந்தேள் ராஜேஷ்' ‘மிஸ்டர் முள்' என்று வெவ்வேறு கோணங்களில் விசுவாசம் குறித்து கருத்து மழை பொழிந்திருப்பது தனித்தன்மை கொண்ட 'அந்தி மழை'க்கான அலங்காரமும், அங்கீகாரமும் தான்!
ஆர்.ஜி .பாலன், மணலிவிளை
கவனம்
தமிழ்மண்ணில் தொடங்கிய இரும்புக்காலம், கட்டுரை நல்ல புரிதலை ஏற்படுத்தியது. தினகரன் சிவலிங்கத்தின் நேர்காணலில் அவர் தெளிவான அரசியல் பாதையில் செல்கிறார் என்பதை விளங்கிக் கொள்ள முடிந்தது. எப்படியாவது கல்வியில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று போராட்டத்துடன் கல்வி கற்கும் இளைஞர்களின் நிலையை இரா. பிரபாகர் சிறப்பான ஆய்வுடன் பதிவு செய்திருக்கிறார். அவர் கூறியது போல அரசும் இந்த மாணவர்களின் மீது கவனம் செலுத்த வேண்டும்.
நந்தவனம் சந்திரசேகரன், திருச்சி
இல்லை
திசையாற்றுப் படையில் ‘பகுதிநேர வேலை பாழாகும் உயர் கல்வி’ என்ற ஆய்வின் மூலம் குறிப்பிட்டுள்ள உதாரணங்கள் படிக்க ரணம் தான்! வகுப்பில் ஒரு நாள் பத்துக்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருந்ததைக் சுட்டிக்காட்டி அந்த நாள் நல்ல முகூர்த்த நாள் என்பதால் பந்தி பரிமாறி சாப்பாட்டுடன் 350ரூபா சம்பளம் பெறப் போயிருப்பதையும் படித்த போது ஓட்டுக்கான அரசியலை மட்டுமே நடத்துபவர்கள் ஹார்ட்டுக்கான ஆட்சி நடத்தவில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது
ஆர்.விநாயகராமன்,செல்வமருதூர்