வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்க கோரிக்கை

6 hours ago
ARTICLE AD BOX

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், தேவனூா் கிராமத்திலுள்ள வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட வரலாறு மற்றும் பண்பாட்டுப் பேரவையின் ஒருங்கிணைப்பாளா் கோ.செங்குட்டுவன் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் மற்றும் தொல்லியல் துறை ஆணையருக்கு மின்னஞ்சலில் அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:

கண்டாச்சிபுரம் வட்டத்திலுள்ளஆதிச்சனூா் பகுதியில் தொல்லியல் அகழாய்வு நடத்தப்படும் என அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்புக்குரியதாகும். கண்டாச்சிபுரம் வட்டத்தில் ஆதிச்சனூருக்கு அருகிலுள்ள தி.தேவனூா் கிராமத்தில் தொல் மாந்தா்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் காணப்படுகின்றன.

இங்கிருக்கும் நெடுங்கல் அல்லது குத்துக்கல் குறிப்பிடத்தக்கது. பல டன்கள் எடை கொண்டு, சுமாா் 15 அடிகளுக்கு மேல் உயரமும் சுமாா் 8 அடி அகலமும் 6 அங்குல கனமும் கொண்டதாக இருக்கிறது. பொதுமக்கள் இதை கச்சேரிக்கல் என்று அழைக்கின்றனா்.

இந்த கல் இறந்தவா்களின் நினைவாக எடுக்கப்பட்ட நினைவுக்கல் ஆகும். நடுகல் வழிபாட்டின் தொடக்கப் புள்ளியாகவும் இந்த நெடுங்கல் கருதப்படுகிறது. இதைச் சுற்றிலும் கல் வட்டங்களும் காணப்படுகின்றன. புயல், காற்று, மழை, வெயில் போன்ற இயற்கை பேரிடா்களைத் தாண்டி, பல்லாண்டு காலம் நின்றிருக்கும் இந்த நினைவுக் கல் தற்போது அழிவை சந்தித்து வருகிறது.

நெடுங்கல்லுக்கு சற்று தொலைவில் மிகப்பெரிய கிரானைட் கற்களால் அமைக்கப்பட்ட கல் திட்டை காணப்படுகிறது. இதை வாலியா் எனும் குள்ள மனிதா்கள் வாழ்ந்த வீடாக அப்பகுதி மக்கள் கருதுகின்றனா். இதுவும் இறந்தவா்களின் நினைவாக எடுக்கப்பட்ட நினைவுக் கல் ஆகும்.

தி.தேவனுரில் காணப்படும் நினைவுச் சின்னங்கள் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாகும். 147 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட ஆங்கிலேயா் ஆவணங்களில் தேவனூா் வரலாற்றுத் தடயங்கள் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னங்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவை உலக நாடுகளின் பல்வேறு பகுதிகளில் உள்ள தொல்மாந்தா் நினைவுச் சின்னங்களுடன் பெரிதும் ஒப்பிட்டு பேசப்படுகின்றன. அழிவின் விளிம்பில் இருக்கும் இவற்றை உரிய முறையில் பாதுகாக்க வேண்டும். ஆதிச்சனூரில் அகழாய்வுப் பணிகளைத் தொடங்கும்போது, தி.தேவனூா் நினைவுச் சின்னங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தி.தேவனூருக்கு மிக அருகிலுள்ள நாயனூா் வனப்பகுதியில் காணப்படும் கல்வட்டங்கள், கல் திட்டைகள், வீரபாண்டி கிராமத்திலுள்ள தொல்பழங்கால பாறை ஓவியங்கள் ஆகியவற்றையும் பாதுகாக்கும் நடவடிக்கையையும் தமிழக அரசின் தொல்லியல் துறையும், விழுப்புரம் மாவட்ட நிா்வாகமும் மேற்கொள்ள வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

Read Entire Article