ARTICLE AD BOX
சாதிப்பதற்கு வயது தடை இல்லை என்று எத்தனையோ மனிதர்கள் நிரூபித்திருக்கிறார்கள். சிலர் மட்டும் வயதைக் காரணம் காட்டி திறமையை புரிந்துகொள்ள மறுப்பார்கள். திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் லட்சியத்தை அடைவதற்கும் வயது ஒரு பொருட்டல்ல.
துணிவும், முயற்சியும் இருந்தால் எந்த வயதிலும் சாதிக்கலாம் அதற்கு உதாரணமானவர்தான் இந்த நபர். இவரைப் பற்றி கேள்விப்பட்டதும் படித்த தகவல்கள் இங்கு.
தற்போது யூடியூப் என்பது மிகவும் சாதாரணமாகிவிட்ட ஒன்றாக இருக்கிறது. யார் வேண்டுமானாலும் யூட்யூபை தொடங்கலாம். அதில் சம்பாதிப்பது என்பது மிகச்சிலரால் மட்டும்தான் முடிகிறது. காரணம் அவர்களின் முழு ஈடுபாடு.
ஆனால் தனது 12 வயதில் யூடியூப் பற்றி சிந்திக்க ஆரம்பித்து 18 வயதில் வீட்டை விட்டு வெளியே வந்து இப்போது மில்லியன் கணக்கில் சம்பாதிக்கும் இந்த இளைஞரின் கதை தெரியுமா?
ஆம். யூடியூப் உலகில் மிஸ்டர் பீஸ்ட் என்றால் அறியாதவர்கள் இருக்க முடியாது. இவரது உண்மை பெயர் ஜிம்மி டொனால்ட்சன். 1998 ம் வருடம் பிறந்த இவர் தனது வேகமான மற்றும் உயர்-தயாரிப்பு வீடியோக்களுக்காக அறியப்படுகிறார், சுமார் 372 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களுடன் இயங்கும் இவரது சேனலில் சவாலான, அனைவரும் விரும்பும் வகையில் வீடியோக்களை தொகுத்து வழங்குகிறார்.
இவர் கடந்த 2012ம் ஆண்டில் இருந்து யூடியூபராக திகழ்ந்து வருகிறார். மிஸ்டர் பீஸ்ட் இது வரை 740 வீடியோக்கள் (தனது முதன்மை சேனலில் மட்டும்) பதிவிட்டுள்ளதாகவும் இவரது முதன்மை சேனலான மிஸ்டர் பீஸ்ட்'க்கு 141 மில்லியன் சப்ஸ்க்ரைபர்ஸ் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 2023ம் ஆண்டு கணக்கின்படி ஜிம்மி டொனால்ட்சன் சொத்து மதிப்பு 106 மில்லியன் டாலர்களுக்கும் மேல் என அறியப்படுகிறது.
இத்தனை சிறு வயதில் இமாலய வெற்றியுடன் மில்லியனராக வலம் வர இவர் எத்தகைய உழைப்பைத் தந்திருக்க வேண்டும்? எத்தனை நெருக்கடிகளை சந்தித்திருக்க வேண்டும்?
12 வயதில் தனது யூடியூப் சேனலை துவங்கி கேம்களை ஆடிவந்த பீஸ்ட்டுக்கு பெரிய யுடியூபராக ஆகவேண்டும் என ஆசை. என்ன மாதிரி விடியோக்கள் வைரல் ஆகிறது என நாள் முழுக்க கணிணியில் அமர்ந்து ஆராய்ந்து புதிய விடியோக்களை அப்லோடு செய்வார்.
கணவரைப் பிரிந்து மகனை வளர்த்த அவரது தாய் "படிக்காமல் என்ன இது?" என அதட்டியும் கேட்கவில்லை பீஸ்ட். 30,000 சப்ஸ்கிரைபர்கள்தான் இருந்த நிலையில் வயது 18 ஆகி கல்லூரியில் சேர அட்மிஷனும் வந்தது. கல்லூரிக்கு போனால் யுடியூப் கனவு சாத்தியமாகாது என்றபோது பீஸ்ட் அந்த முடிவை எடுத்தார். "நான் கல்லூரிக்கு போகமாட்டேன். இனி நான் முழுநேர யுடியூபர்தான்."
சம்மதிக்காத தாயை விட்டு 18வது பிறந்தநாளில் வீட்டை விட்டு வெளியேறி நண்பனின் வீட்டில் தங்கிக்கொண்டு சானலை நடத்தினார். முதல் பெரிய ஹிட் அதன்பின் வந்தது. 40 மணிநேர விடியோ. ஒன்றுமுதல் 1 லட்சம் வரை எண்ணிக்கொண்டு இருந்தார். 40 மணிநேரம் தூங்காமல் 1 லட்சம் வரை எண்ணி முடித்து, அதை நன்றாக எடிட் செய்து வெளியிட்டார். 3 கோடி வியூக்கள்.
அதன் பின் பிராண்டுகளின் பார்ட்னர்ஷிப் வந்தது. மக்களுக்கு ஒரு டாஸ்க் கொடுத்து பிராண்டுகள் மூலம் பெரிய பரிசும் கொடுப்பார். இப்படி பல வழிகளில் தனது சேனலின் பார்வையாளர்களை உயர்த்தி வெற்றி மேல் வெற்றிகளைக் குவித்தார் பீஸ்ட். வீட்டை விட்டு துரத்திய அம்மா மகிழ்ந்து அவரிடமே பணியில் சேர்ந்தது ஹைலைட்.
ஆனால் 40 மணிநேரம் உட்கார்ந்து 1 லட்சம் வரை எண்ணுவது என்பதெல்லாம் வேறு லெவல். இலக்கின் மீது அதீத வெறி இருந்தால்தான் இப்படி வெற்றிபெற முடியும்.
ஆகவே, சாதிக்க வயது என்றும் தடையில்லை என்பதை நாமும் உணர்ந்து பிள்ளைகளை ஊக்குவிப்போம்.