ARTICLE AD BOX
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரானது கடந்த பிப்ரவரி 19-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. பாகிஸ்தான் மற்றும் துபாயில் ஹைப்ரிட் மாடலில் நடைபெற்றுவரும் போட்டியில், இதுவரை 5 லீக் ஆட்டங்கள் முடிவை பெற்றுள்ளன. அதில் இந்தியா இரண்டு முறையும், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா முதலிய அணிகள் தலா ஒரு முறையும் வெற்றியை பதிவுசெய்துள்ளன.
இந்நிலையில், 6வது லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியில் வென்றால் மட்டுமே வங்கதேசம் அரையிறுதி செல்வதற்கான வாய்ப்பை தக்கவைக்க முடியும் என்பதால் போட்டி கவனம் பெற்றுள்ளது.
236 ரன்கள் சேர்த்த வங்கதேசம்..
பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டி மைதானத்தில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசியது. வெற்றிபெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் பேட்டிங் செய்ய களமிறங்கிய வங்கதேச அணி சிறப்பான தொடக்கத்தை பெற்றது.
கேப்டன் ஷாண்டோ நிதானமாக விளையாட 2 சிக்சர்கள் 1 பவுண்டரி என அதிரடியாக தொடங்கிய தன்ஷித் ஹசன் மிரட்டினார். 8 ஓவர்கள் வரை விக்கெட்டையே விட்டுக்கொடுக்காமல் 45/0 என சிறப்பாக வங்கதேசம் தொடங்க, வேகப்பந்துவீச்சுக்கு பதிலாக ஸ்பின்னரான பிரேஸ்வெல்லிடம் பந்தை கொடுத்த மிட்செல் சாண்ட்னர் வங்கதேசத்தின் முதல் விக்கெட்டுக்கு அடித்தளம் போட்டார்.
ஆனால் முதல் விக்கெட்டுடன் நிறுத்தாத பிரேஸ்வெல், கடந்த போட்டியில் இந்தியாவிற்கு எதிராக சதம்விளாசிய தவ்ஹித் உட்பட முஸ்பிகூர் ரஹிம், முகமதுல்லா என முக்கியமான வீரர்களின் விக்கெட்டை கழற்றினார். 45 ரன்னுக்கு 0 விக்கெட்டில் இருந்த வங்கதேசம் 118 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் தனியாளாக போராடிய கேப்டன் ஷாண்டோ 77 ரன்கள் அடிக்க, இறுதியாக வந்து ஜாக்கர் அலி 45 ரன்கள் அடித்தார். 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த வங்கதேச அணி 236 ரன்களை பதிவுசெய்தது. சிறப்பாக வீசிய சுழற்பந்துவீச்சாளர் பிரேஸ்வெல் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
237 ரன்கள் என்ற இலக்குடன் ஆட்டத்தை தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. கடந்த போட்டியில் சதம் விளாசிய யங் முதல் ஓவரின் கடைசி பந்தில் ரன் எதுவும் எடுக்காமல் டஸ்கின் ஓவரில் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார்.