கொக்கரித்து கொட்டமடித்து கொண்டாடும் கொசுக்கள்! நாமே வளர்த்துவிட்டதுதானே?

2 hours ago
ARTICLE AD BOX

சென்னை நகரில் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் இப்போதைய பெருங்கவலை – கொசுவால் ஏற்படும் டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள்தான்.

சென்னையைப் பொறுத்தவரை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தினமும் பத்து பேராவது இந்த பாதிப்பு அறிகுறிகளுடன் சிகிச்சை நாடி வருகின்றனர் என்று தெரிய வருகிறது. இதுதவிர சில தனியார் மருத்துவ மனைகளிலும் இத்தகைய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

வீட்டைச் சுற்றியுள்ள சுகாதாரமற்ற பகுதிகள்தான் கொசுக்களுக்கு சொர்க்கபூமியாக விளங்குகின்றன. அதற்கு நன்றிக் கடனாக அவை டெங்கு காய்ச்சலை நமக்குப் பரிசளிக்கின்றன.

தற்காலிக முயற்சியாக மருந்து அடித்து கொசுக்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் முயற்சியை மாநகராட்சி மேற்கொண்டிருக்கிறது. கொசுத்தடுப்பு நடவடிக்கையைத் தீவிரப்படுத்த உள்ளாட்சி அமைப்புகளை சுகாதாரத்துறை வலியுறுத்தி வருகிறது. இதையடுத்து 385 ஒன்றியங்களில் ஒவ்வொன்றிலும் 20 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொருவரும் இரண்டு அல்லது மூன்று ஊராட்சிகளை கவனித்துக் கொள்கின்றனர். இவர்கள் வீடு வீடாகச் சென்று கொசு உற்பத்தியாகக் கூடிய பகுதிகளில் கொசுக்களை அழித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
வறுத்த கொண்டைக்கடலை vs வேகவைத்த கொண்டைக்கடலை: ஆரோக்கியத்திற்கு ஏற்றது எது?
Mosquitoes

ஆனாலும் கொசுக்களின் கொட்டம்தான் அடங்கமாட்டேனென்கிறது.

பொதுமக்கள் தவிர, காவல்துறையினர் சிலரும் இந்த டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதற்கு இவர்கள் பணி மேற்கொண்டிருந்த பகுதியில் நிலவிய சுகாதாரக்கேடுதான் காரணம் என்று ஊகிக்க முடிகிறது. நகரம் முழுவதும் அங்கெங்கின்னாதபடி வெகு பரவலாக அசுத்தம் அப்பிக் கிடக்கையில், அது கொசுக்களுக்குக் கொண்டாட்டம்தானே!

எத்தனைதான் தற்காலிகத் தடுப்பு முறைகளை மேற்கொண்டாலும், அவற்றையெல்லாம் பார்த்து ஏளனமாக சிரித்தபடி கொசுக்கள் கொட்டமடிக்கின்றன.

ஒவ்வொரு வீட்டிலும் செல்லப் பிராணிகளாக நாய், பூனை, கிளி என்று எதை வளர்க்கிறோமோ இல்லையோ, கட்டாயம் கொசுவை வளர்க்கிறோம் என்பது வெட்கத்துடன் ஒப்புக்கொள்ள வேண்டிய உண்மை.

தன் வீடு சுத்தமாக இருக்கவேண்டும் என்பதற்காக, வீட்டிலுள்ள குப்பை கூளங்களை வீட்டுக்கு வெளியே கொட்டும் ஒருவர், அவ்வாறு தான் கொட்டிய இடத்தை கொசுக்களுக்குப் பட்டா போட்டுக் கொடுத்திருப்பதை உணர மறுக்கிறார். இவர் கொட்டிவிட்டுப் போன ஒருசில மணிநேரத்தில் அங்கே வெகு எளிதாக கொசுக்கள் உற்பத்தியாகி, அன்றிரவு அவரையே பதம் பார்க்க அவர் வீட்டிற்குள் சுதந்திரமாகப் புகுந்து விடுகின்றன!

சுத்தமும், சுகாதாரமும் நல்ல ஒழுக்கங்கள் என்ற உணர்வே அற்றுப் போய்விட்டதா என்ற ஆதங்கம்தான் ஏற்படுகிறது. சாலையில் தேங்கிய நீரைக் காணும்போதெல்லாம் இங்கே எத்தனை ஆயிரம் கொசுக்கள் உருவாகியிருக்கின்றனவோ என்ற பயம் மூளுகிறது. கொட்டப்பட்டிருக்கும் குப்பைகளைக் காணும்போதெல்லாம் இதனுள் எத்தனை ஆயிரம் கொசுக்கள் ஒளிந்திருக்கின்றனவோ என்ற அச்சம் தோன்றுகிறது.

என்ன செய்வது? நம் ஒழுங்கீனத்தால் நாமே வளர்த்துவிட்ட ஒரு களங்கத்துக்கு நாமே தண்டனைக்கு உள்ளாக வேண்டியிருக்கிறது!

வெளிச்சத்தை நோக்கிச் செல்வது கொசுக்களின் இயல்பாக இருக்கிறது. அதனால்தான் பகலைவிட, வீட்டினுள் இரவில் இவற்றின் வருகையும், கொட்டமும் அதிகரிக்கின்றன. மாலை நேரத்தில் ஜன்னல் கதவுகளை சாத்தி வைத்து இவற்றைத் தடை செய்யலாம். ஆனால் இயற்கை காற்று தடைபட்டுப் போகும். எது தேவலாம் என்று யோசிக்கும்போது கொசுவுக்காகக் காற்றை தியாகம் செய்வதே சரி என்ற முடிவுக்கும் வந்து விடுகிறோம்.

இதையும் படியுங்கள்:
மருத்துவ குணங்கள் நிறைந்த 4 இலைகள்
Mosquitoes

அதே கொசுக்கள், காலையில், வீட்டுக்கு வெளியே தோன்றும் வெளிச்சத்தை நோக்கிப் படையெடுக்கின்றன. அதனால்தான் மாநகராட்சிப் பணியாளர்கள் காலை வேளைகளில் இயந்திரம் மூலமாக மருந்து அடித்து அவற்றைக் கொல்கிறார்கள்.

ஆனால் வீட்டுக்குள்ளேயே சிறு அளவிலாவது நீர்த்தேக்கமோ, குப்பைக் கூளமோ இருக்குமானால், கொசுக்கள் இதிலேயே சுகம் கண்டு வீட்டை விட்டு வெளியே செல்ல விரும்புவதில்லை. என்னதான் கொசுவத்தி, கொசு விளக்கு என்று ஏற்றி வைத்தாலும், அவை அவற்றையும் சமாளிக்கும் சாமர்த்தியம் கொண்டிருக்கின்றன!

‘வந்தபின் காக்கும் வழிமுறைகளை விட, வருமுன் காக்கும் ஏற்பாடாக வீட்டிலும், வெளியிலும் சுத்தம் நிலவ வேண்டும் என்ற மனவுறுதி வராத வரையில், அப்படிப் பழகாத வரையில், எங்களையும், எங்களால் ஏற்படும் நோய்களையும் அழிக்கவே முடியாது,‘ என்று கொசுக்கள் கொக்கரிப்பதும் காதில் விழுகிறது அல்லவா!

Read Entire Article