ARTICLE AD BOX
சென்னை,
6-வது புரோ ஆக்கி லீக் போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் இந்தியாவின் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த ஆட்டம் ஒன்றில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-3 என்ற கணக்கில் இங்கிலாந்திடம் போராடி வீழ்ந்தது. இங்கிலாந்து தரப்பில் ஜேக்கப் (15-வது நிமிடம்), கேப்டன் சாம் வார்ட் (19-வது, 29-வது நிமிடம்), இந்திய அணியில் அபிஷேக் (18-வது நிமிடம்), சுக்ஜீத் சிங் (39-வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர்.
7-வது ஆட்டத்தில் ஆடிய இந்திய அணி சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும். இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் (இரவு 7.30 மணி) மறுபடியும் சந்திக்கின்றன.
முன்னதாக இதே மைதானத்தில் பெண்கள் பிரிவில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-4 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்திடம் பணிந்தது. இந்திய அணி இன்று மீண்டும் நெதர்லாந்துடன் (மாலை 5.15 மணி) மோதுகிறது.