ARTICLE AD BOX
இந்தியாவின் பொருளாதாரம் அதீத வளர்ச்சியை கண்டு வருவதற்கு வங்கிகளும் ஒரு முக்கிய காரணம். இன்றைய காலகட்டத்தில் வங்கிச் சேவைகள் மிக எளிதாக பொதுமக்களைச் சென்றடைகின்றன. அதிலும் கடன் வழங்குதல் மற்றும் முதலீட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட சேவைகளை அதிகளவில் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருவதால், இதில் வட்டி விகிதம் முக்கிய அங்கமாக பார்க்கப்படுகிறது. இதில் நாம் கவனிக்க வேண்டியது ரெப்போ வட்டி விகிதம் தான். இதைப் பொறுத்து தான் கடன், முதலீடு உள்ளிட்ட பல சேவைகளின் வட்டி விகிதம் நிர்ணயிக்கப்படுகிறது. அவ்வகையில் ரெப்போ வட்டிக்கும், முதலீட்டுத் திட்டங்களின் வட்டிக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன என்பதை இப்போது பார்ப்போம்.
நாம் கடன் வாங்கும் போது வட்டி விகிதம் குறைவாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்போம். ஆனால் முதலீடு செய்யும் போது அதிக வட்டி விகிதத்தை எதிர்பார்ப்போம். இது இயல்பான விஷயம் தான் என்றாலும், அதற்கேற்ப வங்கிகளும் இலாப நோக்கத்துடன் தான் செயல்படுகின்றன. இந்த வட்டி விகிதம் அனைத்துமே ரெப்போ வட்டி விகிதத்துடன் மறைமுகமாகத் தொடர்பு கொண்டவை. ரிசர்வ் வங்கி பணவீக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அவ்வப்போது ரெப்போ வட்டியை ஏற்றியும், குறைத்தும் வருகிறது.
ரெப்போ வட்டி விகிதம் குறைந்தால், கடனுக்கான வட்டியும் குறையும் என்பதால் கடன் வாங்கியவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். முதலீடு செய்பவர்களுக்கு அதிக வட்டி கிடைக்க வேண்டுமென்றால், ரெப்போ வட்டி குறைவாக இருக்க வேண்டும். அதாவது, ரெப்போ வட்டி விகிதம் குறையும் போது, வாடிக்கையாளர்கள் பலரும் அதிகளவில் கடன் வாங்க முன்வருவார்கள். இதனால் வங்கிகளில் பணத் தட்டுப்பாடு ஏற்படும். இதனைக் கருத்தில் கொண்டு முதலீட்டை ஈர்க்க வங்கிகள் முதலீட்டுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தும். இந்த சமயத்தில் முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் முதலீட்டை மேற்கொள்வார்கள். இதனால் வங்கிகளில் பணத் தட்டுப்பாடு குறையும்.
பொதுவாக அரசு சார்ந்த நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை வங்கிகள் அதிகபட்சமாக 7.5% வரையிலான வட்டி விகிதத்தை வழங்குகின்றன. மூத்த குடிமக்களுக்கு மட்டும் கூடுதலாக 0.5% வட்டி கிடைக்கும். ரூ.1 இலட்சத்தை 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், ஒரு மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ.625 வரை வட்டி கிடைக்கும். பணத் தட்டுப்பாடு ஏற்படும் நேரங்களில் வங்கிகள் அதிகபட்சமாக 9.5% வரை வட்டி விகிதத்தை உயர்த்தும். இதனால் ரூ.1 இலட்சம் முதலீட்டிற்கு மாதத்திற்கு ரூ.792 வரை வட்டி கிடைக்கும்.
ரெப்போ வட்டி விகிதம் அதிகரித்தால், புதிதாக கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைந்து விடும். இதனால், முதலீட்டுத் திட்டங்களின் வட்டியை வங்கிகள் உயர்த்தாது. இருப்பினும் முதலீடு செய்ய நினைத்து விட்டால், காலம் தாழ்த்தாமல் இருப்பது தான் நல்ல முதலீட்டு யுக்தி. அதேபோல் வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் மாதத் தவணையை கால தாமதமின்றி செலுத்துவது நல்லது. இல்லையேல் அபராதத் தொகையுடன் சேர்த்து கட்ட வேண்டிய சூழல் உருவாகும்.