ARTICLE AD BOX
பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டத்தின் (PMIS) கீழ் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட காலக்கெடுவை நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தில் சேர ஆர்வமுள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இதனை பயன்படுத்துக்கொள்ளலாம்.

பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டத்தில் சேர விரும்பும் மாணவ மாணவிகளுக்கு மத்திய அரசு மற்றொரு வாய்ப்பு தருகிறது. பல்வேறு துறைகளில் பயிற்சிப் பணியில் சேர இது ஒரு மதிப்புமிக்க வாய்ப்பாக உள்ளது. பிரதான் மந்திரி இன்டர்ஷிப் திட்டத்திற்கான காலக்கெடு மார்ச் 12, 2025 இல் இருந்து மார்ச் 31, 2025 ஆக மாற்றப்பட்டுள்ளது. எனவே, இன்னும் பதிவு செய்யாத மாணவர்கள் இறுதி தேதிக்கு முன் பதிவுசெய்யலாம்.

இந்த இன்டர்ன்ஷிப் திட்டத்தின் இரண்டாவது சுற்றுக்கான விண்ணப்பப் பணிகளை கார்ப்பரேட் விவகார அமைச்சகம் தொடங்கியுள்ளது. இந்தச் சுற்றில், 730 மாவட்டங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் புகழ்பெற்ற நிறுவனங்களில் பயிற்சிப் பணியில் சேரும் வாய்ப்பு பெறுவார்கள். இத்திட்டம் நாட்டில் எண்ணற்ற இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு பணிச்சூழலில் பங்கேற்கும் நடைமுறை அனுபவத்தை வழங்குகிறது.

கடந்த ஜூலை மாதம் மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டத்தை அறிவித்தார். இந்த மத்திய அரசுத் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு நாட்டின் 500 சிறந்த நிறுவனங்களில் பயிற்சி வழங்கப்படும். இது அவர்களின் அனுபவத்தை மேம்படுத்தி அவர்களின் வாழ்க்கையை முன்னேற்றும்.

இந்தப் பயிற்சி 12 மாதங்கள் நீடிக்கும். பயிற்சிக் காலத்தில் பயிற்சி பெறுபவர்களுக்கு மாதந்தோறும் ரூ.5,000 உதவித்தொகை வழங்கப்படும். வருகைப்பதிவு மற்றும் நடத்தை அடிப்படையில் நிறுவனம் சார்பில் ரூ.500 வழங்கப்படும். அதே நேரத்தில் அரசாங்கம் பயிற்சி பெறுபவரின் வங்கிக் கணக்கில் ரூ.4,500 செலுத்தும். கூடுதலாக, ஆண்டு இறுதியில் ரூ.6,000 ஒருமுறை வெகுமதியாக வழங்கப்படும்.