ARTICLE AD BOX
புதுடெல்லி,
இந்தியாவில்1972-ம் ஆண்டு நிரந்தர கணக்கு எண், அதாவது பான் எண் நடைமுறைக்கு வந்தது. 10 இலக்க எண்ணைக் கொண்ட பான் கார்டு வரி செலுத்துதல், வரி பிடித்தம் போன்ற தனிநபர் அல்லது நிறுவனத்தின் நிதி பரிவர்த்தனைகளை இணைப்பதில் முக்கிய பங்கினை வகிக்கிறது.
பான் கார்டு என்றாலே வருமான வரி தாக்கல் செய்வதற்கு மட்டும்தான் என்ற காலம் மலையேறி விட்டது. இப்போது எந்தவொரு அதிக மதிப்பிலான நிதி சம்பந்தமான பரிவர்த்தனைகளுக்கும், தங்கம், நிலம் வாங்குவதற்கும் பான் கார்டு கட்டாயம். இதனால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்கிறார்களோ இல்லையோ, மக்கள் பான் கார்டு வாங்கி வைத்துக் கொள்கின்றனர்.
தற்போது மத்திய அரசு வரி செலுத்துவோரின் அடையாளத்தை நவீனப்படுத்தும் நோக்கில் பான் 2.0 திட்டத்தை செயல்படுத்துகிறது. ரூ.1,435 கோடி மதிப்பிலான பான் 2.0 திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. பான் 2.0 திட்டத்தில் பல முக்கிய சிறப்பம்சங்கள் உள்ளன.
குறிப்பாக ஒருங்கிணைந்த டிஜிட்டல் போர்டல், க்யூஆர் (QR)குறியீடு செயல்படுத்தப்பட்ட பான் கார்டுகள் மற்றும் மையப்படுத்தப்பட்ட தரவு மேலாண்மை ஆகியவை அடங்கும்.
2017-18 முதல் பான் கார்டுகளில் QR குறியீடு ஒரு பகுதியாக உள்ளது. இருப்பினும், பான் 2.0 திட்டத்தின்கீழ், புதிய பான் கார்டுகளில் இடம் பெறும் QR குறியீடு தனித்துவம் வாய்ந்தது. QR குறியீடு பான் விவரங்களை சரிபார்த்து நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துகிறது. பான் 2.0 திட்டம், தடையற்ற மற்றும் பாதுகாப்பான வரி அனுபவத்திற்காக விரைவான செயலாக்கம், மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் செலவுத் திறனை உறுதி செய்கிறது.
பழைய பான் கார்டு வைத்திருப்பவர்கள் அது செல்லுபடியாகுமா, ஆகாதா என்பது குறித்து கவலைப்பட தேவையில்லை. ஏனென்றால் உங்களுடைய பான் எண் மாறாது என்பதால் உங்களிடம் தற்போது உள்ள பான் கார்டு செல்லுபடியாகும்.
தற்போது நாடு முழுவதும் சுமார் 78 கோடி பான் கார்டுகள் அமலில் உள்ளன. அவற்றில் 98 சதவீதம் பான் கார்டுகள் தனிநபர்களுடையது என தகவல். அதேசமயம், நம் நாட்டில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் எண்ணிக்கை தோராயமாக 9 கோடி என்ற அளவில்தான் உள்ளது.