ARTICLE AD BOX
பத்திரிகையாளர் சுந்தர புத்தன் தனது தந்தையின் வாழ்க்கையை மையமாக வைத்து எழுதியிருக்கும் நாவல் 'பெரியவன்'.
திருவாரூர் மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தில் இருந்து கொண்டு ஒரு தினசரி நாளிதழின் பகுதி நேர நிருபராகப் பணிபுரியும் நடராசன் தான் கதையின் நாயகன்.
அந்தக் குடும்பத்தில் பிறந்த சகோதர சகோதரிகளில் மூத்தவரான அவர்தான் பெரியவன் என்று அழைக்கப்படுகிறார். குடும்பத்தின் பாரங்களைச் சுமந்து கொண்டும், இருக்கும் சொற்ப நிலத்தில் விவசாயத்தைப் பார்த்துக் கொண்டும் அந்தச் செய்தியாளர் பணியைத் தொடர்கிறார்.
சுற்றுப்புறங்களில் நடக்கும் விழாக்கள் , திருட்டு, கொலை போன்ற குற்றச் செயல்கள், அரசியல் நிகழ்வுகள் பற்றிய செய்திகளை நாளேட்டுக்கு அன்றாடம் அனுப்பி வைப்பார்.
ஆங்காங்கே நடக்கும் விழாக்கள் பொதுக்கூட்டங்களுக்கு விளம்பரங்கள் வாங்கிக் கொடுத்தால் பத்திரிகை அளிக்கும் சொற்ப கமிஷன் தொகையை வைத்துக் கொண்டு பற்றாக்குறை பட்ஜெட்டில் அன்றாடங்களை நிரப்பவே அல்லாடுகிற வாழ்க்கை.
எழுத வேண்டும் என்ற ஆர்வம் இருப்பதால் அதில் ஒரு மன திருப்தி கிடைப்பதால், அதைத் தனது அன்றாடப் பணியாக்கிக் கொண்டவர். அதனால் குடும்பத்தையும் விவசாயத்தையும் இரண்டாம் பட்சமாகவே கருதுகிறார். எனவே குடும்பத்தினரிடம் அவருக்கு மகிழ்ச்சியான பெயர் இல்லை.
உடன் பிறந்தவர்களைக் கரை சேர்க்க நிலத்தை அடமானம் வைத்து நிறைய கடன் வாங்குகிறார். வட்டி சேர்ந்து மீட்க முடியாத நிலை வருகிறது.
இப்படி இறுதி வரை அவர் உலகியல் வாழ்க்கையில் தோல்வி அடைந்தவராகவே இருக்கிறார். தன்னளவில் எழுத்து, வாசிப்பு என்று இறுதிவரை தொடர்ந்து வருகிறார். அதன் மூலம் தன்னளவில் விடுதலை அடைவதாக உணர்கிறவர், பொருளாதார வாழ்க்கையில் மிகவும் தோல்வியுற்றவராக இருக்கிறார்.
அவர் செய்தி சேகரிக்கச் செல்லும் பயணத்தின் போது அவரது பாடுகளையும், குடும்ப வறுமையைக் கடக்க அவர் எதிர்கொள்கிற போராட்டங்களையும் பற்றி விவரித்துக் கொண்டே செல்கிறது நாவல்.
செய்தி சேகரிப்பு, விவசாயம் என்று தொடர்ந்து அலைக்கழிப்புக்குள்ளாகிக் கொண்டே இருக்கிறார் .அதே நேரம் திராவிடர் கழகத்தின் தீவிரத் தொண்டராகவும் கட்சிப் பணிகளிலும் மாநாட்டுப் பணிகளிலும் ஈடுபடுகிறார். நாவலின் இடையிடையே அக்காலத்து அரசியல் நிகழ்வுகளும் பதிவாகியுள்ளன.
பெரியார் இவர் பகுதியில் விடையபுரம் என்ற ஊரில் தங்கியிருந்து பகுத்தறிவுப் பயிற்சிப் பட்டறை நடத்துகிறார். அப்போது இவர் உடன் இருக்கிறார்.
கட்சிக்கூட்டங்கள் எங்கு நடந்தாலும் சென்று செய்தி சேகரிக்கிறார்.அப்போது தலைவர்களைச் சந்தித்தும் பேசுகிறார்.
அப்படி பெரியார், அண்ணா, கலைஞர், நாவலர் போன்ற கட்சி பிரமுகர்களிடம் நேரடியாகச் சந்தித்துப் பேட்டி எடுத்த அனுபவம் உள்ளவர்.
ஆயிரம் இருந்தாலும் குடும்பத்தின் நிராசைகளை நிறைவேற்ற முடியாதவராகவே நடராசன் வாழ்ந்து வருகிறார்.
இந்த நாவல் பழைய தஞ்சை மாவட்டத்தில் திருவாரூர் பகுதியில் உள்ள கிராமங்களைச் சுற்றிச் சுழல்கிறது.
நெல் சாகுபடி விவசாய சம்பந்தமான வேலைகள் பற்றிய விவரனைகள் நிறைய உள்ளன. ஒவ்வொரு ஊரின் நிலப்பகுதியை விவரிக்கும் போதும் அங்குள்ள மரம் செடி கொடிகள் பறவைகள் பற்றியும் நாவலில் பதிவாகியுள்ளது.
இக்கதையில் சோலையூர், பூதமங்கலம், லெட்சுமாங்குடி, பொதக்குடி , அத்திக்கடை, கொரடாச்சேரி, குடவாசல், நீடாமங்கலம், சோழமங்கலம், திருச்செங்காட்டான்குடி, முசிறியம், கமலாபுரம் , எருக்காட்டூர், நத்தம், மாவூர், நாலில் ஒன்று,திருமாஞ்சோலை, வேளுக்குடி, வடபாதிமங்கலம் திட்டாணமுட்டம் என்று ஏகப்பட்ட ஊர்கள் வருகின்றன.
நாவலில் அமுது படையல், ஆடிப்பெருக்கு , காமன் பண்டிகை போன்ற பல்வேறு பண்டிகைகள் வருகின்றன.
எண்பதுகளில் தொடங்குகிற கதை, நடப்புக் காலத்தில் முடிகிறது. சிங்கப்பூர் மைனர் மாக்கான், பறவைகள் ஆர்வலர் நீலகண்டன், எதையும் நேர்நிலையாக எடுத்துக் கொள்ளும் பாக்கியம் பாட்டி, பொறுமையின் வடிவான வடிவு,ஊருக்கு உதவும் பூஞ்சேரியார், துறவு மனம் கொண்ட வீரப்பக் கோனார், பெரியார் தங்க உதவி செய்த விடையபுரம் பண்ணையார், வேலாயுதம் பிள்ளை, ஏராளமான பிரசவங்கள் பார்த்த நரசம்மா போன்ற பல குணச்சித்திரங்கள்.
அரிகாய்ச்சல், அலக்கு, கவணை, காமன்டி போன்ற வட்டார வழக்குகளும் உண்டு. உண்மையை மையமாக வைத்து எழுதி இருப்பதால் புனைவாக உள்ள இடங்களுக்கும் கதையில் நம்பகத்தன்மை வந்துவிடுகிறது.
பெரியவன் நாவல், பக்கங்கள் 208, விலை ரூ. 300 தமிழ் வெளி வெளியீடு, 1,பாரதிதாசன் தெரு, சீனிவாசா நகர், மலையம்பாக்கம் ,சென்னை 600 122. போன்: 90940 05600