ARTICLE AD BOX
மன்னர்கள் காலத்தில், கோவில்களின் பராமரிப்புக்காக விளைநிலத்தின் வரியை நீக்கி அவற்றை கோவில்களுக்கு தானமாக வழங்குவது வழக்கம். இந்த நிலத்தின் விளைச்சல் மூலம் வழிபாடு தொடர்ந்து நடைபெறும் என்பதால் இந்த நடைமுறை மன்னர் காலத்தில் பின்பற்றப்பட்டது. இவ்வாறு மன்னர்களால் தானமாக வழங்கப்படும் சிவன் கோவில் நிலத்தில் திரிசூலக்கல்லும், திருமால் கோவில் நிலத்தில் சங்கு சக்கரம் பொறித்த திருவாழிக்கல்லும் நடுவார்கள்.
பாண்டியர், சோழர் காலத்தில் வழங்கப்பட்ட பிரம்மதேய நிலங்களில் வாமனக்கல் வைக்கும் வழக்கம் இல்லை என்றே கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. அதன் பிறகு பிரம்மதேய நிலங்கள் பிறரால் ஆக்கிரமிக்கப்பட்டதன் காரணமாக இவ்வழக்கம் கி.பி.16-ம் நூற்றாண்டுக்குப் பிறகு உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. பெரும்பாலும் ஒருங்கமைவு இல்லாத கற்களில் வாமன உருவம் கூட்டு உருவமாக வரையப்பட்ட நிலையில் தான் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அதாவது, சிவன் கோவிலுக்கு இவ்வாறு தானமாக வழங்கப்பட்ட நிலத்தில் அந்த நிலத்தின் எல்லைகளை குறித்து தெரிவிக்கும் வகையில் சூலாயுதம் பொறிக்கப்பட்டிருக்கும் கல் ஒன்றை நடுவது வழக்கம். இதற்கு சூலக்கல் என்று பெயர்.
இதேபோல் வைணவக்கோவில்களுக்கு தானமாக கொடுக்கப்படும் நிலத்தை அடையாளம் காட்ட அதன் எல்லையில் திருமாலின் அவதாரமான வாமனன் உருவம் பொறிக்கப்பட்ட கல் ஒன்றை நடுவது வழக்கமாக இருந்துள்ளது. பெருமாளின் அவதாரங்களில் 5-வது அவதாரமாக வாமனன் அவதாரம் குறிப்பிடப்படுகிறது. பிரகலாதனின் பேரன் மாவலியின் செருக்கை அடக்க திருமால், வாமனன் வடிவம் கொண்டு மாவலியிடம் 3 அடி நிலம் கேட்டதாகவும், ஒரு அடியில் வானத்தையும், 2-வது அடியில் பூமியையும் அளந்து விட்டு 3-வது அடியை வைக்க இடமின்றி, மாவலியின் தலையில் வாமனன் வைத்து (மகாபலி சக்கரவர்த்தியின்) அவரின் அகந்தையை அழித்ததாக புராணங்கள் கூறுகின்றன.
அதனால் வைணவக் கோவில்களுக்குத் தானமாகக் கொடுக்கப்படும் நிலத்தின் எல்லையைக் குறிக்க நடப்படும் கற்களில் வாமனன் உருவம் பொறிக்கப்படுவது வழக்கமாக இருந்துள்ளது. இந்த கல்லில் வாமனன் உருவமும், அதன் மேற்பகுதியில் சூரியன், சந்திரன் சின்னங்களும், வாமனன் வலது கையில் கமண்டலம் மற்றும் இடது கையில் குடையுடன் இருப்பது போல் பொறிக்கப்பட்டு இருக்கும்.
சூரியன், சந்திரன் உள்ளவரை இந்த தானத்தை யாரும் அழிக்க கூடாது. கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட இந்த நிலத்தை அபகரிப்பவர்கள் வாமனனின் தண்டனைக்கு உள்ளாவார்கள் என்பதை குறிக்கும் வகையில் இந்த கல் நடப்பட்டது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சில இடங்களில் வாமனக்கல் படைப்பு சிற்பமாக இருப்பதை காணாலாம்.
தமிழகத்தில் சேலம், திருச்சி, உத்திரமேரூர், நெல்லை, விருதுநகர், உசிலம்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் இதுபோன்ற நிலங்கள் இருப்பது அவ்வப்போது இந்த வாமனக்கல் கிடைப்பதன் மூலம் தெரியவருகிறது.