ARTICLE AD BOX

image courtesy: AFP
கராச்சி,
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேச அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இதில்கராச்சியில் இன்று நடைபெற்று வரும் 3வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகள் ஆடி வருகின்றன.
இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து அந்த அணியின் தொடக்க வீரர்களாக டோனி ஜி ஜோர்ஜி மற்றும் ரியான் ரிக்கல்டன் ஆகியோர் களம் இறங்கினர். இதில் டோனி ஜி ஜோர்ஜி 11 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து பவுமா களம் புகுந்தார்.
பவுமா - ரிக்கல்டன் இணை நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தது. நிதானமாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் பவுமா 58 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து வேன் டர் டுசென் களம் இறங்கினார். மறுபுறம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிக்கல்டன் சதம் அடித்த நிலையில் 103 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து மார்க்ரம் களம் இறங்கினார்.
மார்க்ரம் - வேன் டர் டுசென் ஜோடி நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தது. இதில் வேன் டர் டுசென் அரைசதம் அடித்த நிலையில் 52 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து களம் கண்ட மில்லர் 14 ரன்னில் அவுட் ஆனார். மறுபுறம் அதிரடியில் மிரட்டிய மார்க்ரம் 33 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார்.
இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 315 ரன்கள் குவித்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக ரியான் ரிக்கல்டன் 103 ரன்கள் அடித்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் முகமது நபி 2 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 316 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் ஆட உள்ளது.