ARTICLE AD BOX
செய்தியாளர்: அ.ஆனந்தன்
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன் பிடித்துத் துறைமுகத்தில் இருந்து நேற்று 450-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். இதையடுத்து மீனவர்கள் மன்னார் வடக்கு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, அப்பகுதியில் ரோந்து பணி ஈடுபட்டிருந்த் இலங்கை கடற்படையினர் ஐந்து விசை படகுகளையும் அதிலிருந்த ஸ்டாலின், ரமேஷ், ஜெரோன், முனீஸ்வரன், ராஜா, அந்தோணி ராஜ் உள்ளிட்ட 32 மீனவர்களை கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
மீனவர்களிடம் முதற்கட்ட விசாரணை நடைபெற்ற நிலையில், 32 பேரையும் ஐந்து படகுகளுடன் மன்னாார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து மீனவர்களை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை மீன்வளத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், வயிற்றுப் பிழைப்புக்காக மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை உடனடியாக படகுடன் விடுதலை செய்ய வேண்டும் என சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் கண்ணீருடன் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த 45 நாட்களில் 16 விசைப்படகுகளுடன் 108 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.