ARTICLE AD BOX
ஒவ்வொரு மாணவரும், அவர்களது பெற்றோர்களும், பாதுகாவலர்களும் சேர்க்கையின்போது, அந்தந்த கல்வியாண்டின் தொடக்கத்தில் ராகிங் எதிர்ப்பு உறுதிமொழியை சமர்ப்பிக்க வேண்டும் என்று 2009ஆம் ஆண்டு ராகிங் எதிர்ப்பு விதிமுறைகள் கட்டளையிடுகின்றன. கல்வி நிறுவனங்களுக்குள் ராகிங் சம்பவங்களைத் தடுக்க இந்த உறுதிமொழி ஒரு முக்கியமான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ராகிங்கிற்கு எதிரான விதிமுறைகளைப் பின்பற்றாத நாட்டில் உள்ள 18 மருத்துவக் கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக மானியக் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதன்படி தமிழ்நாடு, டெல்லி, அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தலா இரு கல்லூரிகளுக்கும், ஆந்திரப் பிரதேசம், பீகாரில் தலா மூன்று கல்லூரிகளுக்கும், மத்தியப் பிரதேசம், தெலங்கானா, மேற்கு வங்கம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு கல்லூரிக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ராகிங் அச்சுறுத்தலைத் தடுப்பதற்காக, 2009ஆம் ஆண்டு ராகிங் தடைச் சட்ட விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டாயத் தேவைகளை இந்தக் கல்லூரிகள் பின்பற்றவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்துப் பேசிய பல்கலைக் கழக மானியக் குழு செயலாளர் மனீஷ் ஜோஷி, ”மாணவர்களிடம் இருந்து ராங்கிங்கிற்கு எதிரான முயற்சிகளைப் பெற இந்தக் கல்வி நிறுவனங்கள் தவறிவிட்டதாக எங்களுக்குத் தெரியவந்துள்ளது. ராகிங் தடைச் சட்டம் 2009-இன்படி, ஒவ்வொரு கல்வியாண்டு தொடக்கத்திலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அல்லது அவர்களின் பாதுகாவலர்களிடமிருந்து ராகிங்கிற்கு எதிரான உறுதிமொழியை எழுத்துப்பூர்வமாகப் பெறுவது கட்டாயம். வளாகத்துக்குள் ராகிங் கொடுமை நடக்காமல் தடுப்பதற்காக கல்வி நிலையங்கள் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான நடவடிக்கையாகும். ஆனால் இக்கல்வி நிறுவனங்கள் விதிமுறைகளைப் பின்பற்ற தவறியது மட்டுமல்ல; மாணவர்களின் நலன்மீது அலட்சியமாக செயல்பட்டதையே காட்டுகிறது. இதையடுத்து அந்தக் கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நோட்டீஸ் கிடைத்த 7 நாட்களுக்குள் இதுகுறித்த விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக அளிக்க வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விளக்கம் அளிக்கத் தவறினால், 2009ஆம் ஆண்டு ராக்கிங் எதிர்ப்பு விதிமுறைகளின்படி, அபராதம் விதித்தல் மற்றும் பிற திருத்த நடவடிக்கைகள் உட்பட மேலும் தேவையான நடவடிக்கைகளைத் தொடர வேண்டிய கட்டாயம் ஏற்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.