ARTICLE AD BOX
நம் வாழ்க்கையில் நாம் எங்கு அமைதி காக்க வேண்டுமோ அங்கே அமைதி காத்து, எங்கு கேட்க வேண்டுமோ அங்கே கேட்டு, எங்கு பேச வேண்டுமோ அங்கே பேசினால் போதும் நாம் சிறப்பாக வாழ முடியும். இதைப் புரிந்துக் கொள்ள ஒரு குட்டி கதையைப் பார்ப்போம்.
ஒருநாள் கோமதி தன் கணவனிடம் நான்கு பொம்மைகளை எடுத்து வந்துக் காட்டினாள். ‘இந்த நான்கு பொம்மைகளும் சாதாரண பொம்மைகள் இல்லை. இது சற்று விஷேசமான பொம்மைகள். இதன் காதுகளில் ஓட்டை இருக்கிறது பாருங்கள்’ என்று தன் கணவனிடம் காட்டினாள்.
தன் கணவனிடம் ஒரு மெல்லிய சங்கிலியை கொடுத்து அதை முதல் பொம்மையின் காதில் விட சொன்னாள் கோமதி. இவ்வாறு செய்த போது அந்த சங்கிலி மறுபக்க காதின் வழியே வந்து விட்டது. இப்போது கோமதி விளக்கினாள், ‘இப்படி தான் சில மனிதர்கள் நாம் என்ன சொன்னாலும் அதை இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டு விடுவார்கள்.’
இப்போது இரண்டாவது பொம்மையைக் கொடுத்து சங்கிலியை காது வழியாக விடச்சொன்னாள். சங்கிலி வாய் வழியாக வெளியே வந்தது. ‘இந்த மாதிரி மனிதர்கள் நாம் எதை சொன்னாலும் அதை அடுத்த நொடியே வெளியே பரப்பி விடுவார்கள்’ என்று கூறினாள். மூன்றாவது பொம்மையை கொடுத்து மீண்டும் அதையே செய்ய சொன்னாள். ஆனால், அதன் காது வழியே சங்கிலியை விட்டும் வெளியே வரவேயில்லை.
‘இப்படிப்பட்ட மக்களிடம் நாம் எது சொன்னாலும், அது வெளியே வரவே வராது’ என்று சொன்னாள். ‘சரி, இதில் யார் தான் சிறந்த மனிதர்?’ என்று கணவர் ஆர்வமாக கேட்டார். அதற்கு கோமதி, ‘என் கையில் இருக்கும் நான்காவது பொம்மை தான்!’ என்று பதிலளித்தாள்.
இப்போது கணவர் அந்த நான்காவது பொம்மையின் காது வழியாக சங்கிலியை விட, அது இன்னொரு காது வழியாக வெளியே வந்தது. இரண்டாவது முறை செய்ய சொன்னாள். இப்போது அந்த சங்கிலி வாயின் வழியாக வந்தது. மூன்றாவது முறையாக செய்ய சொல்ல, அந்த சங்கிலி இப்போது வெளியே வரவில்லை.
கோமதி தன் கணவரிடம், ‘நான்காவது பொம்மை போன்ற மனிதர்கள் தான் நம்பகமானவர்கள். அவர்களை முழுமையாக நம்பலாம். இவர்கள் எங்கு பேசவேண்டுமோ அங்கு பேசி, எங்கு கேட்க வேண்டுமோ அங்கே கேட்டு, எங்கு அமைதி காக்க வேண்டுமோ அங்கே அமைதி காப்பார்கள்’ என்று விளக்கினாள். இந்த நான்கு பொம்மைகளில் நீங்கள் எந்த பொம்மை என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.