ARTICLE AD BOX
வாரந்தோறும் புதுப்புதுப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வந்தாலும் வார கடைசியில் ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்களை பார்த்து ரசிப்பதற்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அந்த வகையில் இன்று ஓ.டி.டி.யில் வெளியாகும் 4 படங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம்.
'வணங்கான்'
இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் மாற்றுத்திறனாளியாக, வித்தியாசமான நடிப்பில் உருவான படம் 'வணங்கான்'. கடந்த ஜனவரி 10-ந்தேதி வெளியான இந்த படத்தில் ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஸ்கின், சாயா தேவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்க, ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
நாம் அன்றாடம் கடந்து செல்லும் செய்திகளுக்கு பின்னால் அதை அனுபவிப்பவர்களுக்கு எவ்வளவு வேதனை இருக்கும் என்பதை 'வணங்கான்' படத்தில் இயக்குநர் பாலா சொல்லி உள்ளார். இந்தப்படம் இயக்குநர் பாலாவுக்கும், அருண் விஜய்க்கும் திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில் இன்று (21-ந் தேதி) டென்ட்கொட்டா ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ள இந்த படத்தை பார்த்து ரசித்து கொண்டாடுங்கள்.
'டாகு மகாராஜ்'
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நந்தமுரி பாலகிருஷ்ணா. இவரின் 109-வது படம் 'டாகு மகாராஜ்'. இந்த படத்தை பிரபல இயக்குனரான பாபி கொல்லி இயக்கி உள்ளார். இப்படத்தில் பாபி தியோல், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஊர்வசி ரவுத்தேலா, சாந்தினி சவுத்ரி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு எஸ் தமன் இசையமைத்துள்ளார்.
கடந்த ஜனவரி 12-ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் பாலகிருஷ்ணாவின் கெரியரில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையையும் படைத்தது. சனி மற்றும் ஞாயிறு அன்று நண்பர்களுடன் கண்டுகளிக்கும் வகையில் இப்படம் இன்று நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
'பாட்டல் ராதா'
குடியும், குடியின் பொருட்டு ஒரு மனிதன் சிதைவதும், அவன் அதிலிருந்து மீள எடுக்கும் முயற்சிகளை தனிமனிதப் பிரச்னையாகச் சுருக்காமல், சமூகப் பிரச்னையாக அணுகி, அதிலுள்ள சிக்கல்களையும், அரசின் மீது கேள்விகளை எழுப்பி இருக்கும் 'பாட்டல் ராதா' திரைப்படம் ஜனவரி 24-ம்தேதி திரையரங்குகளில் வெளியானது. நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரித்துள்ள இந்த படத்தை பா.ரஞ்சித்தின் உதவி இயக்குனர் தினகரன் சிவலிங்கம் இயக்கியுள்ளார். இந்த படத்தில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற இப்படம் இன்று ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது. கண்டு களியுங்கள்.
'செல்பி'
ஜி.வி. பிரகாஷ்க்கு ஜோடியாக வர்ஷா பொல்லம்மா நடித்துள்ள படம் 'செல்பி'. ஆக்ஷன் மற்றும் திரில்லர் திரைப்படமான 'செல்பி' படத்தினை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்க, இசையமைப்பாளரும் இப்படத்தின் நாயகனுமான ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இயக்குனர் வெற்றி மாறனின் உதவி இயக்குனர்களில் ஒருவரான மதிமாறன் இயக்கியுள்ள இப்படத்தில் கவுதம் வாசு தேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் இன்று சிம்பிலி சவுத் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உங்களை மகிழ்விக்க வருகிறது.