யேமனில் அமெரிக்கா வான் வழி தாக்குதல்: 24 பேர் பலி!

12 hours ago
ARTICLE AD BOX

யேமன் நாட்டில் அமெரிக்க படைகள் வான் வழி தாக்குதலை நிகழ்த்தியுள்ளன. இந்த தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

யேமன் தலைநகர் சனாவில் சனிக்கிழமை(மார்ச் 15) நடத்தப்பட்டுள்ள தாக்குதலில் 13 பேரும், ஹௌதி படையினர் அதிகளவில் வசித்து வரும் சாதா பகுதியில் 4 குழந்தைகள், ஒரு பெண்மணி உள்பட 11 பேரும் உயிரிழந்தனர்.

செங்கடலில் இஸ்ரேல் கப்பல்கள் மீது தாக்குதலை தொடரப்போவதாக ஹௌதி படையினர் அச்சுறுத்தியுள்ள நிலையில், அதற்கு எதிர்வினையாக யேமன் நாட்டில் ஹௌதி படையினர் வசிக்கும் இடங்களைக் குறிவைத்து அமெரிக்கா தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. வானிலிருந்து குண்டு மழை பொழிந்த நிலையில், குண்டு விழுந்த இடங்களுக்கு அருகிலிருந்த பகுதிகளில் பயங்கர வெடிச்சத்தமும் அதிர்வும் உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்க ராணுவத்தின் இந்த தாக்குதலை போர்க்குற்றம் என்று கண்டனம் தெரிவித்துள்ளது ஹௌதி நிர்வாகக் குழு. அமெரிக்கவுக்கு பதிலடி தர தங்கள் படையினர் தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றபின் ஹௌதி படையினர் மீது நடத்தப்படும் முதல் தாக்குதல் இதுவாகும். இந்த நிலையில், ஹௌதி படையினர் மீது தாக்குதல் தீவிரப்படுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க போர்க் கப்பல்கள் மற்றும் வணிக கப்பல்கள் மீது ஹௌதி படை 174 முறை தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், ஹௌதி படையினரை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு என்று டிரம்ப் நிர்வாகம் வரையறுத்துள்ளது.

இந்த நிலையில், ஈரான் ஹௌதி படைக்கு அளித்து வரும் ஆதரவை உடனடியாக நிறுத்திக்கொள்ள டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில், ஈரானின் வெளிநாட்டுக் கொள்கைகளில் தலையிட அமெரிக்காவுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என்று ஈரான் எதிர்வினையாற்றியுள்ளது.

Read Entire Article