ARTICLE AD BOX
ஹிந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம் என முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கட்சித் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் தமிழகத்துக்கான கல்வி நிதியை விடுவிக்க முடியும் என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ’ஹிந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்’ என்ற தலைப்பில் திமுக தொண்டர்களுக்கு கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதில் தெரிவித்திருப்பதாவது:
”பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்கும் அறவழிப் போராட்டம். அன்னைத் தமிழை ஆதிக்க மொழியிடமிருந்து பாதுகாக்கின்ற போராட்டம். 85 ஆண்டுகளுக்கும் மேலாக சளைக்காமல் தொடரும் வெற்றிகரமான போராட்டம். அதுதான் தமிழர்களின் உணர்வுடன் கலந்துள்ள இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம்.
இந்தியை அவர்கள் திணித்துக் கொண்டே இருக்கிறார்கள். நாம் எதிர்த்துக் கொண்டே இருக்கிறோம். ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரை ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டம் தொடரும் என்று நான் உறுதி அளிக்கிறேன்.
வடக்கின் ஆதிக்கத்திற்கு வால் பிடிக்கும் அந்த விஷமக் கூட்டம் நம்மை நோக்கி கேட்கின்ற முதல் கேள்வி, 'இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் எல்லாம் இந்தியை ஏற்றுக் கொண்டிருக்கும்போது, தமிழ்நாடு மட்டும் ஏற்க மறுப்பது ஏன்?' என்பதுதான்.
இதையும் படிக்க : மார்ச் 5-ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்: முதல்வர் ஸ்டாலின்
இந்தியா விடுதலை அடைந்து, தனக்கான அரசியமைப்புச் சட்டத்தை வகுத்துக்கொண்டு, குடியரசு நாடாக ஆன போது, கல்வி என்பது மாநிலப் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. ஒவ்வொரு மாநிலமும் தனக்கான மொழிக் கொள்கையை வகுத்துக் கொள்ளும் வாய்ப்பு அமைந்தது. இந்தியா விடுதலையடைவதற்கு முன்பே, தனக்கான மொழிக்கொள்கையையும் தொலைநோக்குப் பார்வையையும் கொண்டிருந்தது இன்றைய தமிழ்நாடான அன்றைய சென்னை மாகாணம். அதற்கு அடிப்படைக் காரணம், திராவிட இயக்கத்தின் மொழியுணர்வும் இனப்பற்றும்தான். அதுதான், தமிழ்நாடு இன்றளவும் தனித்துவமான மாநிலமாகவும், கல்வியில்-, திறன் மேம்பாட்டில்-உலகளாவிய உயர்ந்த வேலை வாய்ப்புகளில் முன்னணியில் நிற்கும் மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தியிருக்கிறது.
தாய்நிலத்தில் ஆழக் காலூன்றி, உலகப்பரப்பை ஆங்கிலத்தின் மூலமாகக் கைப்பற்றினோம். தாய்மொழியை அடிப்படையாகவும், ஆங்கிலத்தைத் தொடர்பு மொழியாகவும் கொண்டு அண்ணா வகுத்தளித்த இருமொழிக் கொள்கையைத் தமிழ்நாடு கடைப்பிடித்து வருவதால்தான் இந்த வளர்ச்சியைப் பெற்றுள்ளது.
தாய்மொழியாம் தமிழ் மொழி, இந்திய அரசினால் செம்மொழித் தகுதியைப் பெற்ற முதல் மொழி என்ற பெருமையைப் பெற்றுத் தந்தார் கலைஞர்.
நாம் எந்த மொழிக்கும் எதிரியில்லை. யார் எந்த மொழியைக் கற்பதற்கும் தடையாக நிற்பதில்லை. அதே நேரத்தில், தாய்மொழியாம் தமிழை அழிக்க நினைக்கும் ஆதிக்க மொழி எதுவாக இருந்தாலும் அதை அனுமதிப்பதில்லை என்பதால்தான் இருமொழிக் கொள்கையைக் கடைப்பிடிக்கிறோம்.
தமிழ்நாட்டை வஞ்சிப்பதையே பா.ஜ.க. தன் கொள்கையாகக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பா.ஜ.க. நிர்வாகிகளோ தமிழுக்குத் துரோகம் செய்யும் இந்தி- சமஸ்கிருதச் சேவகர்களாக இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டு மக்களிடமிருந்து வரியைப் பெற்றுக்கொண்டு, தமிழ்நாட்டு மாணவர்களின் கல்விக்கான நிதியை ஒதுக்காமல் ஒன்றிய பா.ஜ.க அரசு வஞ்சித்து வரும் போக்கை தமிழ்நாட்டின் பள்ளி மாணவர்களும்கூட தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள். கடந்த 21, 22 ஆகிய தேதிகளில் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றதுடன், பெற்றோர்-ஆசிரியர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும்போது, ஒன்றிய அரசு நமக்கு நிதி தர மறுப்பதை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டி, “10ஆயிரம் கோடி தந்தாலும் இந்தியைத் திணிக்கும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்கமாட்டோம்” என உறுதியுடன் தெரிவித்தேன்.
இதனைக் கேட்ட கடலூரைச் சேர்ந்த சிறுமி நன்முகை, “மத்திய அரசு நிதி தரலைன்னா என்ன, நான் தருகிறேன்” என்று தன்னுடைய சேமிப்புப் பணமான 10 ஆயிரம் ரூபாயை காசோலையாக அனுப்பி நெகிழ வைத்திருக்கிறார். இதுதான் தமிழ்நாட்டு மக்களின் உணர்வு.
ஒரு நன்முகை அல்ல, ஒரு கோடிக்கும் அதிகமான இளம் நன்முகைகள் இந்த மண்ணில் இருக்கிறார்கள். இளம் வயதினர் முதல் மூத்த குடிமக்கள் வரை தமிழ் மண்ணில் வாழ்கின்றவர்களின் தாய்மொழிப் பற்றும் இன உணர்வும் ஆதிக்க மொழியிடமிருந்து அன்னைத் தமிழைக் காக்கும் என்ற உறுதியான நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அந்த நம்பிக்கையுடன்தான் இன்னொரு மொழிப் போர்க்களத்தை நாம் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.