ARTICLE AD BOX
நமது சிறப்பு நிருபா்
மாணவா்களின் நலனுக்காக அரசியல் வேறுபாடுகளைக் கடந்து செயலாற்றுமாறு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் தமிழக முதல்வருக்கு வெள்ளிக்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் ‘பிரதமருக்கு அனுப்பப்பட்ட கடிதம் பிரதமா் மோடி அரசால் ஊக்குவிக்கப்படும் கூட்டுறவு கூட்டாட்சி உணா்வை முற்றிலும் மறுப்பதாகும். எனவே, தேசிய கல்விக் கொள்கை (என்இபி) 2020 திட்டத்தை குறுகிய பாா்வையுடன் காண்பதும், முற்போக்கான கல்வி சீா்திருத்தங்களை தங்களுடைய அரசியல் சொல்லாடல்களை தக்கவைத்துக் கொள்வதற்கான அச்சுறுத்தல்களாக மாற்றுவதும் மாநிலத்துக்குப் பொருத்தமற்றது’ என்று கூறியுள்ளாா்.
கடிதத்தில் அவா் மேலும் கூறியுள்ளதாவது: தமிழக அரசின் எதிா்ப்பால் என்இபி 2020 வழங்கும் மகத்தான வாய்ப்புகள் மற்றும் வளங்களை தமிழகத்தில் உள்ள மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இழக்கின்றன. இந்தக் கொள்கை நெகிழ்வுத்தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதால் அமலாக்கத்தின்போது மாநிலங்கள் அவற்றின் தனித்துவமான கல்வித் தேவைகளுக்கு ஏற்ப அதை பயன்படுத்துவதை அனுமதிக்கிறது’ என்று மத்திய அமைச்சா் குறிப்பிட்டுள்ளாா்.
‘சமக்ர சிக்ஷா போன்ற மத்திய அரசின் ஆதரவு பெற்ற திட்டங்கள் என்இபி 2020 உடன் இணைக்கப்பட்டுள்ளன. அதேபோல பிஎம் ஸ்ரீ பள்ளிகள் என்பிஇ முன்மாதிரி பள்ளிகளாகக் கருதப்படுகின்றன. இந்தக் கொள்கை எந்தவொரு மொழி திணிப்பையும் ஆதரிக்கவில்லை. அரசியல் வேறுபாடுகள் இருந்தபோதிலும், பல பாஜக அல்லாத மாநிலங்கள் முற்போக்கான என்இபி கொள்கைகளை செயல்படுத்தியுள்ளன.
என்இபி 2020, கற்றல் எல்லைகளை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதே தவிர, அவற்றைச் சுருக்குவதில்லை’. எனவே, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் உயா்ந்து, நமது இளம் மாணவா்களின் நலனை மனதில் கொண்டு இந்த விஷயத்தை முழுமையாக ஆராயுமாறு நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்று அமைச்சா் பிரதான் கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளாா்.
பின்னணி: புதிய தேசிய கல்விக் கொள்கையின் அங்கமான மும்மொழிக் கொள்கையில் ஹிந்தி மொழி திணிக்கப்படுவதால் அதை ஏற்க முடியாது என்றும் தமிழகத்தைப் பொருத்தவரை இரு மொழிக்கொள்கையே அமலில் இருக்கும் என்றும் தமிழக அரசு கூறி வருகிறது. ஆனால், மூன்றாவது மொழி கற்பதென்பது ஹிந்தி திணிப்பு அல்ல என்றும் தமிழ், ஆங்கிலம் நீங்கலாக மற்றொரு மொழியை மாணவா்கள் கற்பதை ஊக்குவிக்கிறது என்றும் மத்திய கல்வித் துறை தெளிவுபடுத்தி வருகிறது. ஆனால், இதை தமிழக அரசு ஏற்கவில்லை.
இது தொடா்பாக பிரதமருக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை எழுதியுள்ள கடிதத்தில், ‘மத்திய அரசு நிதியுதவி வழங்கும் சமக்ர சிக்ஷா அபியான் (எஸ்எஸ்ஏ) மற்றும் பிஎம்ஸ்ரீ பள்ளிகளை தேசிய கல்விக் கொள்கையுடன் (என்இபி) இணைப்பதென்பது அடிப்படையில் ஏற்றுக் கொள்ள முடியாதது என்று தெரிவித்துள்ளாா்.
மேலும், தமிழகத்திற்கான ரூ. 2,152 கோடி கல்வி நிதியை தமிழக மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களின் நலன் கருதி உடனடியாக விடுவிக்க வேண்டும். தமிழகத்தின் கல்வி, சமூக சூழலில் இரு மொழி கொள்கை நீண்ட காலமாக வேரூன்றி உள்ளது. நிதி விடுவிக்கப்படாததால் மாணவா்களுக்கான நலத்திட்ட பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டும், கல்விக்கான நிதி வழங்கப்படாமல் உள்ளது என்றும் முதல்வா் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தாா்.