ARTICLE AD BOX
பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநில செயலாளர் ரஞ்சனா நாச்சியார் அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக பாஜகவில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய நான் பாஜகவில் இருந்து விடைபெறுகிறேன். அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் என்னை நான் இன்றோடு விடுவித்துக் கொள்கிறேன்.
தேசியம் என்பதும், தெய்வீகம் என்பதும் நாடு முழுவதும் விரிவடைந்து நாட்டு மக்களுக்கு நன்மை பயக்காமல் ஒரு குறுகிய வட்டத்துக்குள் சுருங்கிப்போவதில் எனக்கு உடன்பாடு இல்லை. தாயகம் வேறு தமிழகம் வேறு என்கிற மாற்றான் தாய் மனப்போக்கு என்னை இன்னமும் இங்கு இருக்க வேண்டுமா? என்கிற கேள்வியை எழுப்பியது.
என்னைப் பொறுத்தவரை தாயகம் காக்கப்பட தமிழகம் சிறக்க வேண்டும், மும்மொழிக் கொள்கை திணிப்பு, திராவிடத்தின் மீதுள்ள வெறுப்பு, தொடர்ந்து புறக்கணிக்கப்படும் தமிழகம் என்பதெல்லாம் ஒரு தமிழச்சியாக என்னால் ஏற்றுக்கொண்டு உங்களுடன் இயங்க முடியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
பாஜகவிலிருந்து விலகுவது குறித்து புதிய தலைமுறையிடம் பிரத்யேகமாக பேசிய அவர், “பாஜகவிலிருந்து விலகுவதற்கான காரணங்கள் நிறைய இருக்கிறது. சிலவற்றை சொல்லமுடியும்; சிலவற்றை சொல்லமுடியாது. முக்கியமான காரணங்களை மட்டும் அறிக்கையில் தெரிவித்துள்ளேன். பாஜகவிலிருந்து இதுவரை யாரும் என்னைத் தொடர்புகொள்ளவில்லை.
இந்தி திணிப்பு என்பதைத் தாண்டி இன்னொரு மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் பாஜகவின் நிலைப்பாடு. இந்தி என்று குறிப்பிட்டு நாங்கள் சொல்லவில்லை என்றுதான் பாஜகவினர் கூறுவார்கள். ஆனால், நான் மராத்தி கற்றுக்கொள்ள வேண்டுமென்றால், அப்பள்ளியில் அதற்கான ஆசிரியர்கள் இருப்பார்களா என்று தெரியவில்லை. ஆனால், பெரும்பான்மையான பள்ளிகளில் இந்தி ஆசிரியர்கள் இருப்பார்கள்.
இந்தியை திணிக்கிறார்களோ இல்லையோ, இந்தியைத்தான் படிக்க வேண்டுமென்ற நிர்பந்தத்திற்கு உள்ளாவோம். இந்தியை திணிக்கவில்லை, ஆனால், எடுத்துக்கொள்ளுங்கள் என்கிறார்கள்” எனத் தெரிவித்தார். இந்நிலையில் அவர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.