நானும் விஜய்யும் அதிகம் பேசிக்கொள்ள மாட்டோம் - எஸ்.ஏ. சந்திரசேகர்

2 hours ago
ARTICLE AD BOX

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் திரைப்படங்களை இயக்குவதோடு மட்டுமல்லாமல் நடித்தும் வருகிறார். இவர் தற்போது அறிமுக இயக்குனர் நிதின் வேமுபதி இயக்கத்தில் 'கூரன்' என்ற படத்தில் நடித்துள்ளார். இது நாயை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சத்யன், பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியன், ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் வருகிற 28-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதற்கான புரமோஷன் நிகழ்ச்சி சென்னை வடபழனியில் உள்ள பீனிக்ஸ் மாலில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் எஸ்.ஏ. சந்திரசேகர் அவருடைய மகன் விஜய் குறித்தும் அவரது அரசியல் வருகை குறித்தும் பேசியுள்ளார்.

அதாவது, "நானும் விஜய்யும் எப்போதுமே இப்படிதான் இருப்போம். விஜய்யின் இளமைப் பருவத்திலிருந்தே அதிகமாக பேசிக்கொள்ள மாட்டோம். குறைவாகவே பேசிக்கொள்வோம். சாப்பிட்டாயா? கல்லூரியில் இருந்து வந்து விட்டாயா? என மிக சாதாரணமாக தான் எங்களுடைய பேச்சு இருக்கும். எல்லோரும் இப்போது தான் அப்படி பேசுவதாக நினைக்கிறார்கள். ஆனால் நாங்கள் முன்பிருந்தே இப்படி தான்.

விஜய்யும் அதிகம் பேசமாட்டார். நானும் அதிகம் பேசமாட்டார். அவர் பெரிய நட்சத்திரமாக வளர்ந்து விட்டதால் எல்லோரும் உன்னிப்பாக கவனிக்கிறார்கள். அம்மாவிடம் கை கொடுக்கிறார், அப்பாவிடம் கை கொடுக்கவில்லை என்றால் அப்பாவை பிடிக்காது என நினைத்துக் கொள்கிறார்கள். அப்பாவிற்கு அவருக்கும் சண்டை என அவர்களாகவே கற்பனை செய்துகொள்கிறார்கள். அப்படி எல்லாம் ஒன்றுமில்லை.

அதே நேரம் விஜய் நடிக்க வரும்போதும் ரொம்ப கடுமையாக இருப்பேன். என்னுடைய உதவி இயக்குனர்களிடம் கடுமையாக இருப்பது போல விஜய்யிடம் கடுமையாக தான் இருப்பேன். அப்போது தான் ஒருவரை ஒழுங்காக வடிவமைக்க முடியும். நம் மனதில் குழந்தைகள் இப்படி உருவாக வேண்டும் என நினைத்துக் கொண்டு அதற்கு என்னென செய்ய வேண்டுமோ, அதை செய்ய வேண்டும். பிளாட்பாரத்தில் படுத்து கிடந்த நான் இப்போது பல்வேறு மொழிகளில் படங்கள் இயக்கியுள்ளேன். இதை எதையும் விஜய்யை உட்கார வைத்து அறிவுரையாக நான் சொன்னதில்லை. அப்படி தான் நான் அவரை வளர்த்திருக்கிறேன்" என பேசினார்.

உங்கள் படங்களில் நிறைய அரசியல் சமூக கருத்துகளை சொல்லியிருக்கிறீர்கள், உங்களை யாரும் அரசியலுக்கு அழைக்கவில்லையா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, "நான் இயக்குனரான பின்பு கருணாநிதி, ஜெயலலிதா என எல்லோரும் நண்பர்கள் தான். எல்லோருமே அரசியலுக்கு வர சொல்லி அழைத்துள்ளார்கள்.

ஆனால் நான் அரசியலுக்கு வர வேண்டும் என்பதை விட எனது மகன் விஜய் அரசியலுக்கு வந்து மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. அவருக்காக ரசிகர் மன்றம் ஆரம்பித்தது, அதனை நற்பணி மன்றமாக மாற்றியது பின்பு அதனை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றியது எல்லாம் நான் தான்.

ஆனால் என்னுடைய அரசியல் ஆசையை அவரிடம் நேரடியாக நான் கூறியதில்லை. இப்போது அவராகவே அரசியலுக்கு வந்து சமூக உணர்வுள்ள மனிதராக மாறிவிட்டார். தன்னை உயர்த்திய தமிழ்நாட்டிற்கு திருப்பி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார்" என பதிலளித்தார்.


Read Entire Article